ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் * பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

ராமநாதபுரம்:''மற்ற மாநிலங்களை போல ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பணிக்கொடையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்,'' என, ராமநாதபுரத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலப்பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறினார்.

ராமநாதபுரத்தில் நடந்த கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற மாநிலப் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது:

சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 9 அறிவிப்புகள் அறித்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரம் பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை செப்.,ல் குழு அறிக்கையை பெற்ற உடன் எந்த மாற்றமும் இன்றி அமல்படுத்த வேண்டும்.

மற்ற மாநிலங்களில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.25 லட்சம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் வழங்கப்படுவதில்லை. எனவே தமிழக அரசும் அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும் ரூ.25 லட்சம் பணிக்கொடையை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும். 2004-2006 பட்டதாரி ஆசிரியர்கள் தொகுதிப்பூதியத்தில் பணிபுரிந்த காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

நிறுத்தப்பட்ட ஊக்க ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது. அதனை விரைந்து முடித்து ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். எங்களது கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை இதுவரை மூன்று முறை சந்தித்துள்ளோம்.

ஜாக்டோ- ஜியோ போராட்டம் காரணமாக செப்., மாதம் பழைய ஒய்வூதியத்திட்டத்தை அரசு அமல்படுத்தும் என நம்புகிறோம். தவறினால் ஜாக்டோ- ஜியோ அமைப்புடன் இணைந்து அடுத்தக்கட்ட போராட்டங்களை நடத்துவோம் என்றார்.

Advertisement