வீரர்களுக்கு உதவும் நவீன தொழில்நுட்பம் * ரவி சாஸ்திரி பெருமிதம்

மும்பை: ''நவீன தொழில்நுட்ப உதவியுடன் 100 முறை 'ரீப்ளே' பார்க்கலாம். இதன் மூலம் வீரர்கள் தங்களது தவறுகளை திருத்திக் கொள்ளலாம்,'' என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
மும்பையில் உலக 'ஆடியோ விஷூவல், பொழுதுபோக்கு மாநாடு நடந்தது. இதில், விளையாட்டு, மீடியா, தொழில்நுட்பம், தொழில்முனைவோர் இடையிலான சந்திப்பு நடந்தது. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 62, இதில் பங்கேற்று பேசியது:
கிரிக்கெட் அரங்கில் 1983ல் முதன் முதலில் உலக கோப்பை வென்ற நாங்கள், மக்கள் கனவை நனவாக்கினோம். இதன் பின் கடந்த 40 ஆண்டுகளில் இந்தியா, பல்வேறு தொடர்களை வென்றது. இவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க, உங்களுக்கு 'மீடியா' ஆதரவு தேவைப்படுகிறது.
பொதுவாக வீரர்கள் 'கிட் பேக்கில்' பேட், பேடு என கிரிக்கெட் விளையாடும் பொருட்கள் இருக்கும். இதுபோல 'மீடியாவும்' 'கிட் பேக்கின்' ஒரு அங்கம் தான். மீடியா, தொழில்நுட்பம் என இரண்டும், இதிலுள்ள 'ஹெல்மெட்' போன்றது. இதை, வீரர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தவிர்க்க முடியாது
ஏனெனில் தொழில்நுட்பம் என்பது, விளையாட்டின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. இதை சரியாக பயன்படுத்தி, தங்களை எப்படி வளர்த்துக் கொள்வது என வீரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
தவிர, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது அதிக வளர்ச்சி அடைந்து வருகிறது. இது உங்களுக்கும், அணிக்கும் நல்லது தான் என்றாலும் இதை விளையாட்டின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாறி விட்டன
எனது காலத்தில் ரேடியோ, துார்தர்ஷன் மட்டும் தான் இருக்கும். அப்போது, விளம்பர நிறுவனங்கள் குறிப்பிட்ட தங்களது தயாரிப்புகளை ('பிராண்ட்') கொண்டு சேர்க்க லோகோவை மட்டும் பயன்படுத்த வேண்டும் என கட்டுப்பாடு இருந்தன. தற்போது அனைத்தும் மாறிவிட்டன. பல்வேறு ஒளிபரப்பு தளங்கள் வந்து விட்டன.
'மீடியா' காரணம்
இதன் வழியாக கிரிக்கெட்டின் வளர்ச்சியை பார்த்துள்ளேன். கடந்த 40 முதல் 45 ஆண்டில் இருந்து, இப்போது வரை அடைந்துள்ள வளர்ச்சிக்கு இங்குள்ள ஒவ்வொரு வீரர்களும் தங்களது பங்களிப்பை தந்துள்ளனர். மீடியா, தொழில்நுட்பம் என இவை இல்லாமல் இருந்திருந்தால், கிரிக்கெட் இன்று இவ்வளவு பெரிய வளர்ச்சியை எட்டி இருக்க முடியாது.
நமது தேசத்தில் 150 கோடி மக்கள் உள்ளனர். இதில் 70 சதவீதம் பேர், 30 வயதுக்கு கீழ் உள்ளனர். இவர்களை விளையாட்டு தான் இயக்குகிறது. அப்படி எதுவும் இல்லை என நினைத்தால் அது தவறு. ஏனெனில் கொரோனா காலத்தில் விளையாட்டு தான் அனைவரது உள்ளத்திலும் மகிழ்ச்சியை கொண்டு வந்தது.
இந்திய அணி விளையாடும் போதெல்லாம், மக்கள் முகத்தில் புன்னகையை கொண்டு வந்தது. கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி என எவ்வித விளையாட்டாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் போட்டி நடந்தாலும் சரி, நீங்கள் சிறப்பாக செயல்பட்டால், மிகப்பெரிய மகிழ்ச்சி கிடைக்கும்.
'லாக் டவுன்', தனிமைப்படுத்தப்பட்ட நேரத்தில் கூட, அவர்கள் விளையாட்டு போட்டிகளை பார்த்து ரசித்தனர். இதற்கு 'மீடியா' தளங்கள் தான் முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
100 முறை பார்க்கலாம்
ரவி சாஸ்திரி கூறுகையில்,' விளையாட்டுக்கு தொழில்நுட்பம் செய்த உதவிகள் நம்ப முடியாதது. வீரர் ஒருவர் தான் விளையாடியதை 100 முறை மீண்டும் மீண்டும் பார்க்கலாம். எது சரி, எது தவறு என கண்டறிந்து திருத்திக் கொள்ளலாம். தவிர நமது பலம், பலவீனம், எதிரணி குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள உதவுகிறது. இது எதிரணியை வீழ்த்த கைகொடுக்கிறது,'' என்றார்.
டெஸ்ட் அணியில் சுதர்சன்
ரவி சாஸ்திரி கூறுகையில்,'' தற்போது விளையாடும் வீரர்களில் மூன்று வித கிரிக்கெட்டுக்கும் ஏற்றவராக சாய் சுதர்சன் உள்ளார். இடது கை பேட்டரான இவர், இங்கிலாந்தின் சூழ்நிலைகளை அறிந்தவர். பேட்டிங் திறமையும் நன்றாக இருப்பதால், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் சுதர்சன் இருப்பார் என நம்புகிறேன்,'' என்றார்.
மேலும்
-
மதுரையில் ஜூன் 1ல் கூடுகிறது தி.மு.க., பொதுக்குழு!
-
தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கை நிறுத்த அரசு திட்டமா; ராமதாஸ் கேள்வி
-
லாரி - சுற்றுலா வேன் மோதி விபத்து; இத்தாலியை சேர்ந்த 2 பேர் உட்பட 7 பேர் பலி
-
டில்லி ரயில்வே ஸ்டேஷனில் 'பை' ஏற்படுத்திய பரபரப்பு: வெடிகுண்டு என பயணிகள் பீதி
-
நீட் தேர்வர்களுக்கான ஆடை குறியீடுகள், அணியக்கூடாத ஆபரணங்கள்; வழிகாட்டுதல்கள் வெளியீடு
-
முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பாதுகாப்பை திரும்பப்பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது; திருமாவளவன்