முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பாதுகாப்பை திரும்பப்பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது; திருமாவளவன்

சென்னை: ''முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கான பாதுகாப்பை திரும்பப் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய கல்வி கொள்கை வாயிலாக புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால்தான், தேசிய கல்வி கொள்கையை தவிர்க்க வேண்டும் என சொல்லி வருகிறோம். எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும், 'ஆல் பாஸ்' என்ற முறை உள்ளது. ஆனால், குறிப்பிட்ட சதவீதம் மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி என, புதிய தேசிய கல்வி கொள்கை சொல்கிறது.
படிக்கும் மாணவர்களின் கல்வியை நிறுத்தி, வீட்டுக்கு அனுப்பி, இடைநிற்றல் சதவீதத்தை உயர்த்துவது தான் மோடி அரசின் நோக்கம். மாணவர்களை பள்ளி படிப்பிலேயே நிறுத்திவிட்டு, குலத் தொழிலுக்கு அனுப்ப வலியுறுத்துவதாகவே இந்த அறிவிப்பு இருக்கிறது. ஜனநாயக சக்திகள் இதை புரிந்து, தேசிய அளவில் எதிர்ப்பு குரல் எழுப்ப வேண்டும்.
பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும் பொதுத் தேர்வு இருந்தால் போதுமானது. ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு வரை வரிசையாக பொதுத் தேர்வுகள் நடத்தி, மாணவர்களை வடிகட்டி வீட்டுக்கு அனுப்பும் முயற்சியை பா.ஜ., மேற்கொள்கிறது.
தேசிய கல்வி கொள்கை ஏன் வேண்டாம் என்பதற்கு, சமீபத்தில் வெளியான அறிவிப்பே போதும்.முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கான பாதுகாப்பை திரும்பப் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவருக்கு அச்சுறுத்தல் இருப்பது, அனைவருக்கும் தெரிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.









