'யூத் கேலோ' இந்தியா துவக்கம்

பாட்னா: யூத் கேலோ இந்தியா விளையாட்டு இன்று பீஹாரில் துவங்குகிறது. இந்தியா முழுவதும் இருந்து 10,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
'கேலோ இந்தியா' விளையாட்டில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதில் இளைஞர்களுக்கான 7வது யூத் கேலோ இந்தியா போட்டி இன்று பீஹாரில் துவங்குகிறது. வரும் 15ம் தேதி வரை நடக்கும். 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள், 21 வயதுக்குட்பட்ட கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பர். இந்தியா முழுவதும் இருந்து 10,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 28 பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளன.
ஒலிம்பிக் போட்டிகளான வில்வித்தை, ஜூடோ, வாலிபால், கால்பந்து, ரக்பி, டென்னிஸ், டேபிள் டென்னிஸ் மற்றும் ஒலிம்பிக்கில் இல்லாத மல்லர் கம்பம், யோகாசனம், கோ கோ உள்ளிட்ட போட்டிகளும் இடம் பெற்றுள்ளன.
நடப்பு சாம்பியனாக மஹாராஷ்டிரா (57 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என 158 பதக்கம்) களமிறங்குகிறது. கடந்த ஆண்டு 98 பதக்கத்துடன் இரண்டாவது இடம் பிடித்த தமிழகம் மீண்டும் அசத்தலாம்.

Advertisement