மலையாள மண்ணில் லஞ்சம், ஊழலை வேரறுக்கும் 'மதுரையின் மருமகன்'

நீதி, நேர்மை, துணிச்சலோடு பணியாற்றி கேரள மாநிலத்தில் பொதுமக்களின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்று சாதித்து வருகிறார் தமிழரான ஐ.பி.எஸ்., அதிகாரி கே.கார்த்திக். திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த இவர் 'மதுரையின் மருமகன்' என்பது கூடுதல் சிறப்பு.

கோட்டயம், எர்ணாகுளம், வயநாடு, ஆலப்புழை உட்பட பல மாவட்டங்களில் எஸ்.பி.,யாக பணிபுரிந்த இவர், தற்போது திருவனந்தபுரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை (விஜிலென்ஸ்) டி.ஐ.ஜி.,யாக உள்ளார். இவர் விஜிலென்சிற்கு வந்த பிறகு லஞ்சம், ஊழல் புகார் என்ன வந்தாலும், பாரபட்சமின்றி விசாரித்து கைது செய்கிறார்; சரியாக விசாரித்து தண்டனை வாங்கி கொடுக்கிறார். பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு, அவர்களின் உரிமையான சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட 'கை நீட்டுபவர்களை' கண்டால் இவர் கை, விடுவதில்லை; அவர்களுக்கு 'கைவிலங்கு' தான்!

எஸ்.பி.,யாக பணிபுரிந்த போது துப்புதுலக்குவதில் சிரமம் இருந்த வழக்குகளை, சவாலாக எடுத்து விசாரித்தார். கேரளாவை உலுக்கிய பல் மருத்துவ மாணவி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை துப்புதுலக்கியதற்காக, இவருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் விருது கிடைத்தது. இந்த வழக்கில் பீகாரில் கள்ளத்துப்பாக்கி தயாரிக்கும் இடத்திற்கே சென்று குற்றவாளியை கைது செய்தார்.

கேரளாவில் கைவரிசை காட்டிய நகை கொள்ளையர்களை நேபாளம் வரை தேடிச்சென்று கைது செய்தார். சில மலையாள 'க்ரைம்' திரைப்படங்களில் இடம்பெற்ற போலீஸ் விசாரணைகள், இவரது நடவடிக்கைகளின் தாக்கத்தில் உருவாகி இருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.

இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் 2011 பேட்ச் ஐ.பி.எஸ்., அதிகாரி. இவர் மதுரையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி எம்.ஆர். மோகனின் மகள் சிவசங்கரியை திருமணம் செய்துள்ளார். முதல்வராக ஜெயலலிதா இருந்த போது கூட்டுறவு தேர்தல்கள் நடத்த பொறுப்பு அதிகாரியாக செயல்பட்டவர் மோகன்; திருவாரூர் மாவட்ட கலெக்டராகவும் சிறப்பாக பணியாற்றியவர்.

திருவண்ணாமலை தீரன்



மதுரை மண்ணின் மாப்பிள்ளையான 'திருவண்ணாமலை தீரன்' கார்த்திக் ஐ.பி.எஸ்.,யிடம்,' முதன்முதலாக நீங்கள் போலீஸ் தொப்பி அணிந்த போது உங்கள் லட்சியம் என்னவாக இருந்தது' என கேட்ட போது 'மக்கள் மகிழ்ச்சியாக வாழ சட்டம் ஒழுங்கு முக்கியம். தனிப்பட்ட ஒருவருக்கு உடல் நலம், அடிப்படை தேவைகள் எப்படி முக்கியமோ அதுபோல வெளியே, சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தான் நிம்மதியாக அவர் வீட்டில் துாங்க முடியும்; வெளியில் நடமாட முடியும். மாணவி ஒருவர் கல்லுாரிக்கு சென்றால் எந்த சமூக விரோதிகளாலும், எந்த பிரச்னையுமின்றி நிம்மதியாக சென்று வீடு திரும்ப வேண்டும். எனவே சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்த வேண்டும்; நீதி நேர்மையோடு செயல்பட வேண்டும் என்று நினைத்தேன். ஒழுக்கமாக, நேர்மையாக பணியாற்ற எனக்கு பெற்றோர் கற்று தந்தனர்' என்கிறார்.

அவர் மேலும் கூறியது: நாங்கள் நடுத்தர விவசாய குடும்பம். படிக்கும் போதே பெற்றோருக்கு உதவியாக விவசாய வேலைகள் செய்வேன்; மாடு மேய்ப்பேன். குடிசை வீடு; என் படிப்பு வேப்பமரத்தடியில் அமர்ந்து தான்! சைக்கிளிலும் நடந்துமாய் பள்ளிக்கு சென்று பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் பெற்று இன்ஜினியரிங் படித்து தனியார் நிறுவனத்தில் வேலை பெற்றேன். அப்போது அந்நிறுவனம் சார்பாக மதுரையில் ரயில்வே பணிக்கு வந்திருந்தேன். ரயில்வே உயரதிகாரி ஆய்வுக்கு வந்திருந்தார். அதுவரை மந்தமாக நடந்த பணிகள், அந்த அதிகாரியின் உத்தரவுகளால் வேகம் பெற்றது.

முதல் முயற்சியில் வெற்றி



அரசு அதிகாரம் இருந்தால் நாமும் மக்களுக்கு எதாவது செய்யலாம்; அதற்கு அதிக அதிகாரம் உள்ள சிவில் சர்வீஸ் பணியே சரி என நினைத்து, தனியார் பணியை கைவிட்டு, சிவில் சர்வீசிற்கு ஓராண்டு தமிழக அரசின் பயிற்சி மையத்தில் படித்தேன். முழுமுயற்சியோடு தேர்வு எழுதினேன். முதல்முறையிலேயே ஐ.பி.எஸ்., பெற்று கேரளா 'கேடர்க்கு' வந்தேன்.

குற்றவழக்கை நேர்மையாக, சரியாக விசாரித்து, சட்டத்தை அமலாக்கும் போது தொடர்ந்து அதுபோன்ற குற்றங்கள் குறையும். நமது நேர்மையான பணியால் மக்களுக்கு நல்லது நடந்தால் மனதிற்கு திருப்தி தானே.

போலீஸ் ஸ்டேஷனுக்கு யாரும் சும்மா வருவது இல்லை. ஒரு பிரச்னையை தீர்க்க முடியவில்லை என்பதால் தான் மக்கள், போலீசிடம் வருகின்றனர். அந்த இடத்தில் நியாயப்படி, நீதிப்படி நாங்கள் நடந்தால் அது வருத்தமுடன் வருபவர் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

மக்களுக்கு கல்வி, ஆரோக்கியம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மட்டுமே முக்கியமல்ல. சட்டம் ஒழுங்கும் மிக முக்கியம். சட்டம் ஒழுங்கை சரி செய்தால் தான் வளர்ச்சி வரும். அதனை உறுதிப்படுத்துவதே என்னை போன்ற அதிகாரிகளின் கடமை.

ஊழலும் ஒரு தடை



அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதில் ஊழலும் ஒரு தடையாக இருக்கிறது. ஒரு மாணவி கல்லுாரி அட்மிஷனுக்காக சான்றிதழ் பெற 1000 ரூபாய் லஞ்சம் கேட்டார் அரசு ஊழியர். மாணவியால் தரமுடியாததால் சர்டிபிகேட் கிடைக்காமல், அட்மிஷன் நடக்கவில்லை. ஆயிரம் ரூபாய் லஞ்சம் தராததால் மாணவி வாழ்க்கையே போனது. இப்படி...பல சம்பவங்கள். எனவே 'காசு கொடுத்தால் தான் ஏதும் நடக்கும்' என்ற நிலையை மாற்ற நினைத்தேன். அப்படியே செயல்படுகிறேன்.

லஞ்ச ஒழிப்பு துறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒரே ஆண்டில் பல வழக்குகளை பதிவு செய்துள்ளோம். அரசின் கீழ் நிலை ஊழியர் முதல் உயரதிகாரிகள் வரை எங்கள் வலையில் சிக்கியிருக்கின்றனர்.

ஒரு மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர் ஒருவரை லஞ்ச வழக்கில் கைது செய்த பின்பு, மறுநாள் முதல் மற்ற ஊழியர்கள் மக்களுக்கான சேவைகளை காசு வாங்காமல் சரியாக செய்தனர். இதனை மக்களே என்னிடம் கூறினர். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக லஞ்சலாவண்ணியத்தை ஒழிக்க முடியும் என்று தீரமாக பேசுகிறார் கார்த்திக் ஐ.பி.எஸ்.,

சட்டம் ஒழுங்கு சரியானால்...

'போலீஸ் ஸ்டேஷனுக்கு யாரும் சும்மா வருவது இல்லை. ஒரு பிரச்னையை தீர்க்க முடியவில்லை என்பதால் தான் மக்கள், போலீசிடம் வருகின்றனர். அந்த இடத்தில் நியாயப்படி, நீதிப்படி நாங்கள் நடந்தால் அது வருத்தமுடன் வருபவர் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மக்களுக்கு கல்வி, ஆரோக்கியம், அடிப்படை கட்டமைப்பு வசதி மட்டுமே முக்கியமல்ல. சட்டம் ஒழுங்கும் மிக முக்கியம். சட்டம் ஒழுங்கை சரி செய்தால் தான் வளர்ச்சி வரும். அதனை உறுதிப்படுத்துவதே என்னை போன்ற அதிகாரிகளின் கடமை'-

- கார்த்திக் ஐ.பி.எஸ்.,

Advertisement