எஸ்.பி.,கோவில், மறைமலை நகரில் ஓயாத பேனர் கலாச்சாரம்

மறைமலைநகர்:தமிழகம் முழுவதும் அனுமதியின்றி பேனர் வைக்க நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

இந்த தடையை மீறி சென்னை புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் பேனர் வைக்கும் கலாச்சாரம் பெருகி வருகிறது.

குறிப்பாக சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர்,காட்டாங்கொளத்தூர் ,மகேந்திரா சிட்டி, பொத்தேரி செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சி, திருமண வாழ்த்து, கல்வி நிறுவனங்களின் பேனர்கள் என சாலை ஓரம் மற்றும் சாலை ஓரம் உள்ள கட்டடங்களின் மேல் தளங்களில் பெரிய அளவில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.

மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெரிய அளவிலான பேனர்கள் முறையான சாரங்கள் அமைக்காமல் வைக்கப்பட்டு உள்ளன.இது போன்ற பேனர்களால் வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதரல் ஏற்பட்டு விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

மேலும் மழைக்காலங்களில் பலத்த காற்று வீசும் போது பேனர் இரும்பு சாரத்துடன் முறிந்துவிழும் அபாயம் உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று பேனர் வைக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவு இருந்தும் யாரும் அதை பின்பற்றுவதில்லை. இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பேனர்களை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement