கார் இல்லாத சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்; சொத்து பட்டியலில் சுவாரஸ்யம்!

15


புதுடில்லி: சொத்து பட்டியல் வெளியிட்டுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் 21 பேரில், 7 பேருக்கு சொந்த கார் இல்லை என்பது, ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்னொரு நீதிபதி, பியானோவை தன் சொத்தாக குறிப்பிட்டுள்ளார்.

டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, நீதித்துறைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

இதையடுத்து கூடிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்தில், அனைவரும் சொத்து விவரம் வெளியிட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இதுவரை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உட்பட 21 பேர் சொத்து விவரம் வெளியிட்டுள்ளனர். இது, உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது. நீதிபதிகளின் சொத்து விவரங்களில் பல சுவாரஸ்யமான விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

பெரும்பாலான நீதிபதிகள் ரியல் எஸ்டேட், நகை, வங்கி நிரந்தர வைப்பு, எல்.ஐ.சி., பாலிசி, பி.பி.எப்., மற்றும் ஜி.பி.எப்., ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளனர். பலர் வீட்டுக்கடன் பெற்றுள்ளனர். சொத்து விவரம் தாக்கல் செய்துள்ள 21 நீதிபதிகளில் 7 பேருக்கு சொந்த கார் இல்லை. கார் வைத்திருப்பவர்களில் பலரது விருப்பமாக மாருதி ஸ்விப்ட் இருக்கிறது.
நீதிபதி சஞ்சய் குமார், தன் சொத்துக்களில் ஒன்றாக பேர்ல் ரிவர் பியானோ ஒன்றை குறிப்பிட்டுள்ளார்.



நீதிபதிகள் பங்குச்சந்தை முதலீடுகள் எதுவும் செய்யவில்லை. இதற்கு காரணம், நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேண்டியிருக்கும் என்பது தான். நீதிபதி நரசிம்மா, கடந்த 2008ம் ஆண்டு முதல் 31.5 கோடி ரூபாய் வருமான வரியாக செலுத்தியுள்ளார். நீதிபதி விஸ்வநாதன், கடந்த 2010 - 11 முதல் இதுவரை 91.4 கோடி ரூபாய் வருமான வரியாக செலுத்தியுள்ளார். இவர்கள் இருவரும், தங்கள் வழக்கறிஞர் தொழிலின் மூலம் நல்ல வருவாய் ஈட்டி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement