ரூ.200 கொடுத்தால் 'சூப்பர் பஸ்' இப்படியும் 'கமிஷன்' அடிக்கிறார்கள்

மதுரை: திருப்பரங்குன்றம் அரசு பஸ் டெப்போவில் பணிபுரியும் தினக்கூலி டிரைவர்களுக்கு நல்ல நிலையில் உள்ள பஸ்களை ஒதுக்க ரூ.200 'கமிஷன்' வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த டெப்போவில் 180 நாட்களுக்கு வேலை என்ற அடிப்படையில் தினக்கூலியாக 20க்கும் மேற்பட்ட டிரைவர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு சம்பளம் ரூ.700. நல்ல நிலையில் உள்ள பஸ்களை நிரந்தர டிரைவர்களுக்கும், 'டப்பா' பஸ்களை தினக்கூலி டிரைவர்களுக்கும் ஒதுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் 'டப்பா' பஸ்களை இயக்கும்போது அதிர்வுகளால் தானாக கண்ணாடி விழுந்தாலோ, உதிரி பாகங்கள் 'உதிர்ந்தாலோ' அந்த செலவை தினக்கூலி டிரைவர்களின் சம்பளத்தில் ஈடு செய்கின்றனர். இதனால் தங்களுக்கு நல்ல நிலையில் உள்ள பஸ்களை ஒதுக்க வேண்டும் என கேட்கும் அவர்களிடம் ரூ.200 கமிஷன் பெற்றுக்கொண்டு பஸ்களை ஒதுக்குவதாக புகார் எழுந்துள்ளது.

டிரைவர்கள் கூறுகையில், ''புது பஸ்கள், ஓராண்டுக்குள் வாங்கப்பட்ட பஸ்களை இயக்கும்போது பராமரிப்பு செலவு என்பது குறைவு. ரூ.200க்காக நாங்கள் பார்த்தால், 'டப்பா' பஸ்களை இயக்கி அதில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்ய எங்கள் சம்பளத்தில ஆயிரம், 2 ஆயிரம் என கை வைத்துவிடுவார்கள் என்பதால் நாங்கள் புது பஸ்களை பெற ரூ.200 கொடுத்து வருகிறோம்'' என்றார்.

டெப்போ தரப்பில் கேட்டபோது, ''சிலர் துாண்டுதலின்பேரில் இதுபோன்ற பொய் புகார்களை கூறி வருகின்றனர். பஸ்களை ஒதுக்குவதில் எந்த பாரபட்சமும் பார்ப்பது கிடையாது. பஸ் வெளியே செல்லும் போதும், உள்ளே வரம்போதும் என்ன 'கண்டிஷனில்' இருந்தது என குறிப்பெடுத்து அதில் ஏதாவது பழுது ஏற்பட்டால் விசாரித்து, டிரைவர் மீது தவறு இருக்கும்பட்சத்தில் அவரது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்'' என்றார்.

Advertisement