சர்க்கரையின் அளவு குறைவு என்பதால் கரும்புக்கு ஊக்கத்தொகை இல்லை கவனிக்குமா மத்திய, மாநில அரசுகள்

மதுரை: தமிழகத்தில் விளையும் ஆலைக்கரும்புகளில் 9.50 சதவீத அளவே சர்க்கரை உள்ளதால் மத்திய அரசின் டன்னுக்கு ரூ.355 ஊக்கத்தொகை கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்காது. ஏற்கனவே உற்பத்திச் செலவு அதிகமாக இருப்பதால் டன்னுக்கு ரூ.4000 வழங்குவதாக தமிழக அரசு அறிவித்ததை செயல்படுத்த வேண்டும் என தமிழக கரும்பு விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மத்திய அரசு அக்டோபருக்கான (2025 - 26) கரும்பு அரவை பருவத்திற்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு 4.41 சதவீதமாக உயர்த்தி ரூ. 355 அதிகரித்து நிர்ணயித்துள்ளது. இந்திய அளவில் கரும்பில் உள்ள சர்க்கரையின் சராசரி அளவு 10.50 சதவீதமாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. 10.25 சதவீதத்திற்கு மேல் சர்க்கரை திறன் இருந்தால்தான் டன் கரும்புக்கு மத்திய அரசின் ரூ.355 ஊக்கத்தொகை கிடைக்கும்.

தமிழகத்தில் சர்க்கரை சதவீதம் குறைவாக இருப்பதால் மத்திய அரசின் ஊக்கத்தொகை கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்காது என்பதால் மாநில அரசு டன்னுக்கு ரூ.4000 வழங்குவதாக அறிவித்ததை செயல்படுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

தமிழகத்தில் 40 கரும்பு சர்க்கரை ஆலைகள் உள்ளன. மொத்தம் 15 லட்சம் ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிடப்பட்டு வந்த நிலையில் தற்போது 5 லட்சமாக சுருங்கியுள்ளது. குஜராத்தில் டன்னுக்கு ரூ.4550, சட்டீஸ்கரில் ரூ. 4200, மகாராஷ்டிராவில் ரூ. 3750, உத்தரபிரதேசத்தில் ரூ.3520, பீஹாரில் ரூ.3490ம், தமிழகத்தில் மட்டும் டன்னுக்கு ரூ.3134 மட்டுமே வழங்கப்படுகிறது.

சர்க்கரைத்தன்மை குறைவு ஏன்



வட இந்தியாவின் சீதோஷ்ண நிலையும், நல்ல தண்ணீரும் கரும்பு விளைச்சலுக்கும் அதன் சர்க்கரை அளவு அதிகரிப்புக்கும் காரணமாக உள்ளது. தமிழகத்தின் ஆறுகளில் கழிவுநீர் கலப்பதால் அந்த தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் போது நிலத்தின் தன்மை கெட்டு அதில் விளையும் கரும்பின் சர்க்கரை அளவும் குறைகிறது. தமிழகத்தில் தான் உற்பத்திச் செலவு அதிகம். கரும்பு வெட்ட டன்னுக்கு ரூ.1600 கட்டணம், தோகை உரிப்பது, களை வெட்டுவது, உரம் வைப்பது என ஆண்களுக்கு ரூ.800, பெண்களுக்கு ரூ.400 தினக்கூலி வழங்குகிறோம். பிற மாநில விவசாய கூலிகளுக்கான ஊதியம் இதில் பாதி தான். அதேநேரத்தில் 10.25 சதவீதத்திற்கு மேல் சர்க்கரை அளவு இருந்தால் தான் மத்திய அரசு டன்னுக்கு ரூ.355 வரை ஊக்கத்தொகை வழங்கும்.

உற்பத்திக்கு அதிகம் செலவழித்த தமிழக விவசாயிகளுக்கு இந்த ஊக்கத்தொகை கிடைக்காததால் ஏமாற்றத்தில் உள்ளோம். ஆட்சிக்கு வந்தவுடன் டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மத்திய அரசு தற்போது எங்களை கைவிட்டுள்ள நிலையில், ஆட்சி முடிவதற்குள் முதல்வர் சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.

Advertisement