குமரி கண்ணாடி நடைபாலம் உறுதியாக உள்ளது: வேலு

கன்னியாகுமரி: பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு அளித்த பேட்டி:

மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், கன்னியாகுமரியில் கட்டப்பட்ட கண்ணாடி இழை நடை மேம்பாலத்தை, கடந்தாண்டு டிச., 30ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை ஐ.ஐ.டி., நிபுணர்கள் தான், இந்த பாலத்திற்கான வடிவமைப்பிற்கு ஒப்புதல் அளித்தனர். அவர்களும் பாலத்தை ஆய்வு செய்து, அதன் தாங்கும் திறன் நன்றாக உள்ளது என, சான்றிதழ் அளித்துள்ளனர்.

எனினும், முதல்வர் உத்தரவின்பேரில், பாலங்கள் மற்றும் கட்டுமானங்களை ஆய்வு செய்யும், 'ரைட்ஸ்' எனும் டில்லியில் உள்ள தனியார் நிறுவனம் மறுஆய்வு செய்தது. அவர்களும், பாலத்தின் உறுதி மற்றும் தாங்கும் திறன் நன்றாக இருப்பதாக சான்றிதழ் அளித்துள்ளது.

எனவே, நுாற்றாண்டுகளுக்கு மேல் இருக்க வேண்டிய இப்பாலத்தின் உறுதி தன்மை குறித்து சுற்றுலா பயணியர் அச்சப்பட வேண்டாம். இந்த பாலத்தை, 'கண்ணாடி இழை வள்ளுவர் பாலம்' என்றே அழைக்கின்றனர்.

கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணியருக்காக, மூன்று கப்பல்கள் வாங்க உள்ளோம். அதற்கான டெண்டரில், குறைந்த விலை தரும் நிறுவனங்களிடம் இருந்து, டிசம்பருக்குள் கப்பல்கள் வாங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement