புதுவை பக்தர்கள் ராஜஸ்தானில் சிறைபிடிப்பு

புதுச்சேரி: காசி யாத்திரைக்கு சென்ற புதுச்சேரி பக்தர்கள், ராஜஸ்தான் எல்லையில் சிறைபிடிக்கப்பட்டனர்.
புதுச்சேரியில், உருளையன்பேட்டை, சாரம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50 பேர், கடந்த 26ம் தேதி காசிக்கு ஆன்மிக பயணமாக பஸ்சில் புறப்பட்டனர். பல மாநிலங்களை கடந்து டில்லியை அடைந்தனர்.
ஆக்ராவில், தாஜ்மகாலை சுற்றி பார்ப்பதற்காக சாலை மார்க்கமாக நேற்று சென்றனர். ஆனால், பஸ் டிரைவருக்கு வழி தெரியாமல், பஸ், ராஜஸ்தான் மாநில எல்லைக்குள் புகுந்தது.
அங்கு செல்ல, 'பர்மிட்' இல்லாததால், அம்மாநில போக்குவரத்து அதிகாரிகள் பஸ்சை தடுத்து நிறுத்தினர். அதையடுத்து பர்மிட் இல்லாததற்கு 3,000 உட்பட 7,000 ரூபாய் அபராதம் விதித்தனர். அபராதத்தை கட்ட முயன்றபோது, ராஜஸ்தான் மாநில அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. 60,000 ரூபாய் செலுத்தினால் தான் பஸ்சை விடுவிப்போம் என தெரிவித்துள்ளனர்.
பஸ்சில் சென்றவர்களிடம் போதிய பணம் இல்லாத நிலையில், அனைவரையும் இறக்கி ஒரு கட்டடத்தில் தங்க வைத்தனர். பஸ்சில் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். இதனால், மொபைல் போனில் வீடியோ வெளியிட்டு, தங்களை மீட்க, புதுச்சேரி அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களிடம் கண்ணீர் மல்க முறையிட்டனர்.
இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் சிவா, முதல்வர் ரங்கசாமியை தொடர்பு கொண்டு பக்தர்களை மீட்க கோரிக்கை வைத்தார். முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., நேரு ஆகியோர், செல்வகணபதி எம்.பி.,யை தொடர்பு கொண்டு, புதுச்சேரி பக்தர்களை மீட்க கேட்டுக் கொண்டனர்.
அதையடுத்து முதல்வர் ரங்கசாமியின் உத்தரவில், அமைச்சர் லட்சுமிநாராயணன், ராஜஸ்தான் மாநில அமைச்சர்களை தொடர்பு கொண்டு புதுச்சேரி பக்தர்களை விடுவிக்க பேசினார்.
கலெக்டர் குலோத்துங்கன், போக்குவரத்து ஆணையர் சிவகுமார் ஆகியோரும் ராஜஸ்தான் மாநில போக்குவரத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு புதுச்சேரி பக்தர்களை பாதுகாப்பாக அனுப்ப கேட்டுக் கொண்டனர்.
அதையடுத்து, 51,000 ரூபாய் அபராதம் செலுத்திய பின், மாலை 4:00 மணிக்கு புதுச்சேரி பக்தர்கள்அனைவரும் அதே பஸ்சில் தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க புறப்பட்டனர்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா, உருளையன்பேட்டை தி.மு.க., பொறுப்பாளர் கோபாலிடம் ராஜஸ்தானில் தவிக்கும் புதுச்சேரி பக்தர்களுக்கு உதவும்படி அறிவுறுத்தினார். இதனால், அவர் 60,000 ரூபாயை ராஜஸ்தானில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைத்தார்.
புதுச்சேரி பக்தர்கள் கூறுகையில், 'தவறுதலாக நாங்கள் சென்ற பஸ் ராஜஸ்தான் மாநிலத்தில் நுழைந்துவிட்டது. முதலில், 7,000 ரூபாய் தான் அபராதம் விதித்தனர். நாங்களும் அதை செலுத்த தயாராகவே இருந்தோம். ஆனால், திடீரென 60,000 ரூபாய் செலுத்துமாறு கூறினர். வக்கீல் ஒருவர் இடையில் வந்து 20,000 ரூபாய் கேட்டார். ஒரு நாளில் விடுவித்து விடுவதாக தெரிவித்தார்.'இதனால், 80,000 ரூபாய் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. கலெக்டர் பேசுகிறார் என, மொபைல் கொடுத்தோம். காறி துப்பினர். புதுச்சேரி அரசு, ராஜஸ்தான் அரசிடம் தன் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்' என்றனர்.
மேலும்
-
தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்
-
அக்னி நட்சத்திரம் முதல் நாளில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!