திருவொற்றியூர் ரயில்வே குட்டையை களமிறங்கி சீரமைத்த தன்னார்வலர்கள்

திருவொற்றியூர்: ரயில்வே குட்டையின் கரைகளை சீரமைத்த தன்னார்வலர்கள், நடைபாதை அமைத்து தர மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.

திருவொற்றியூர் மண்டலம், ஆறாவது வார்டு, அம்பேத்கர் நகர் - அண்ணாமலை நகர் வரை, 2 கி.மீ., துாரத்திற்கு, ரயில்வே குட்டை உள்ளது.

மழைக்காலத்தில் சுற்று வட்டார குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், குட்டையில் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயர்வில் இருக்கும்.

இந்நிலையில், குட்டையின் கரைகளில் புதர்மண்டியும், ஆகாய தாமரை செடிகள் வளர்ந்தும் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது.

அதை சீரமைக்கும் பொருட்டு, நீர்நிலை பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த இளைஞர்கள், நேற்று காலை, குளத்தின் கரைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி, குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், ஆறுமுகம், சீனிவாசன் ஆகியோர் தலைமையில், 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ரயில்வே குட்டையின் கரைகளில் மண்டியிருந்த புதர்களை அகற்றினர். மேலும், உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து, கரைகளை பலப்படுத்தி, நடைபாதை அமைக்க வேண்டும். குளத்தில் வளர்ந்துள்ள ஆகாயதாமரை செடிகளைஅகற்றி, அதிகளவில் தண்ணீர் தேங்க வழிவகை செய்ய வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement