'குழந்தைகளை நேர்மையாளராக பெற்றோர் உருவாக்க வேண்டும்'

கோவை; அச்சீவர்ஸ் கிளப் இந்தியா சார்பில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், பெற்றோர்களுக்கான வழிகாட்டி 2025 எனும் நிகழ்ச்சி, ஹூசூர் ரோடு ஆர்த்ரா அரங்கில் நேற்று மாலை நடந்தது.

நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசியதாவது:

நல்ல இளைஞனை உருவாக்குவதே, கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். மாணவர்கள் நல்லொழுக்கத்துடன் இருக்க வேண்டும். இலக்கு வேண்டும். அதற்கான திட்டம் வேண்டும். அதை செயல்படுத்த வேண்டும்.

நோக்கத்துடன் படிக்கும் போது அனைத்தும் தானாக வரும். மனப்பாடத்தை விட்டு, புரிந்து படிக்க வேண்டும். தமிழகத்தில் மனப்பாடக்கல்வி தான் உள்ளது. உயர்கல்வியின் தரம் தமிழகத்தில் மோசமாக உள்ளது. தமிழக மாணவர்களுக்கு தொடர்பு திறன் இல்லை.

ஒவ்வொரு குழந்தையையும், நேர்மையுடன் உருவாக்குவது பெற்றோர் பொறுப்பு. இந்தியாவில், 70 சதவீத அதிகாரிகள், 90 சதவீத அரசியல்வாதிகள் ஊழல்வாதிகளாக உள்ளனர்.

படித்து முடிக்கும், 80 சதவீத இன்ஜினியர்கள், 90 சதவீத கலை, அறிவியல் பட்டதாரிகள் வேலை செய்ய தகுதியின்றி உள்ளனர். இது மாற வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

முன்னதாக அச்சீவர்ஸ் கிளப் இந்தியா நிறுவனர் லட்சுமிகாந்தன் தலைமை வகித்தார். திட்ட இயக்குனர்கள் எழிலரசி, மாறன், உயர்கல்வி ஆலோசகர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement