வன கிராம மக்கள் உதவியுடன் நக்சலைட் வேட்டை

சென்னை: தமிழக காவல் துறையில், எஸ்.டி.எப்., எனப்படும், சிறப்பு அதிரடிப் படை செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, புதுக்குய்யனுாரில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதிகள், நக்சலைட்டுகள் ஆயுத பயிற்சி பெறும் இடமாக மாறி வருவதால், அவர்களுக்கு எதிராக, சிறப்பு அதிரடிப்படை போலீசார் களமிறங்கி உள்ளனர்.

இதற்காக, வனப்பகுதிகள் அருகே உள்ள, 2,500 கிராமங்களை சேர்ந்த மக்களுடன் இணைந்து, அவர்கள் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறப்பு அதிரடிப்படை போலீசார் கூறியதாவது:



வனப்பகுதிகள் அருகேயுள்ள, 20 மாவட்டங்களில், நக்சலைட்டுகளின் ஊடுருவல் மற்றும் நடமாட்டத்தை கண்டறிய, தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளோம்.

நக்சலைட்டுகளின் தீவிர ஆதரவாளர்கள் என, 22 பேர் அடையாளம் காணப்பட்டு, ரகசிய கண்காணிப்பில் உள்ளனர். மேலும், நக்சலைட்டுகளின் கொள்கைகள் மீது பற்றுள்ள, 276 பேரின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு, அவர்களின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறோம்.

நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒரு அம்சமாக, வனத்தில் உயிர் வாழ்தல் மற்றும் தாக்குதல் முறியடிப்பு என்ற பெயரில், கிராம மக்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement