23 முதல் மணல் லாரிகள் ஓடாது உரிமையாளர்கள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில், 'ஆன்லைன்' முறையில் 'எம் - சாண்ட்', ஜல்லி விற்பனை மேற்கொள்ள வலியுறுத்தி, வரும் 23 முதல் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, மணல் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர்கள் செல்ல ராஜாமணி, எஸ்.யுவராஜ் ஆகியோர் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணல் குவாரிகள் இயங்கவில்லை. இதனால், கட்டுமானப் பணிகளுக்கு ஆற்று மணல் கிடைப்பது முற்றிலுமாக தடைபட்டுள்ளது.

மணல் ஏற்றிச் செல்வதற்கு என வடிவமைக்கப்பட்ட, 55,000 லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதை நம்பி இருக்கும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். எனவே, மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும்.

இந்த சூழலை பயன்படுத்தி, குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், 'எம் - சாண்ட், பி - சாண்ட்', ஜல்லி விலையை அடிக்கடி உயர்த்தி வருகின்றனர். அரசு அனுமதித்த அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை வெட்டி எடுத்து, அதிக விலைக்கு வெளிமாநிலங்களுக்கு விற்று வருகின்றனர். நடைச்சீட்டு முறைகேடு, அதிக பாரம் ஏற்றுதல் போன்ற முறைகேடுகளால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே, குவாரிகள், கிரஷர்களை அரசுடைமையாக்கி, ஜல்லி, எம் - சாண்ட் விற்பனையை, 'ஆன்லைன்' முறையில் மேற்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 23 முதல் தமிழகம் முழுதும் லாரிகளை இயக்காமல் நிறுத்தி, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement