தாலுகா அலுவலகத்திற்குள் புகுந்து போராட்டம்

திண்டிவனம்: இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தினர், தாலுகா அலுவலகத்தில் திடீரென புகுந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டிவனம் வட்டத்திற்கு உட்பட்ட ஏப்பாக்கம், வடம்பூண்டி, கடவம்பாக்கம் கிராமங்களில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்துதர கோரி தாலுகா அலுவலகத்தில் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, நேற்று தாலுகா அலுவலக வளாகத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சங்க தலைவர் பார்த்தீபன் தலைமையில், நிர்வாகிகள் சத்தீஷ்குமார், பிரகாஷ், அறிவழகன், ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். காலை 11.45 மணிக்கு, போராட்டம் நடத்திய சங்கத்தினர் திடீரென்று, தாலுகா அலுவலகத்திற்குள் புகுந்து வருவாய் துறைக்கு எதிராக கோஷமிட்டனர். போலீசார் அவர்களை வெளியேற்றனர்.

போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. திடீர் போராட்டத்தால் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

துணை தாசில்தார் விமல்ராஜ், ஒலக்கூர் பி.டி.ஓ., சிவசண்முகம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வடம்பூண்டி கிராம பழங்குடியினருக்கு குடிநீர் வசதி, ஏப்பாக்கம் ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு சாலை வசதி செய்து தருவதாக உறுதி அளிக்கப்பட்டதால், காத்திருப்பு போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

Advertisement