ரூ.12 லட்சம் பறிகொடுத்தவரை ஏமாற்றிய இரு ஏட்டுகள் கைது

பெங்களூரு: புதையல் தங்கத்தை குறைந்த விலைக்கு தருவதாக கூறி, மருந்துக்கடை உரிமையாளரிடம் 12 லட்ச ரூபாய் மோசடி நடந்தது. பணத்தை மீட்டுத்தருவதாக கூறி அவரிடம் 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இரு போலீஸ் ஏட்டுகள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு ரூரல் மாவட்டம், விஜயபுராவை சேர்ந்தவர் தப்ரேஸ். மருந்துக் கடை உரிமையாளர். இவரது கடைக்கு கடந்த மார்ச் மாதத்தில் மருந்து வாங்க வந்த ஒருவர், தன்னை ரமேஷ் என்று அறிமுகம் செய்து கொண்டார்.

தாவணகெரே மாவட்டத்தில் முதியவர் ஒருவருக்கு புதையல் கிடைத்துள்ளதாக கூறிய அவர், “அதை பாதி விலைக்கு வாங்கலாம்,” என, ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அதை நம்பி ஹரிஹரில் உள்ள நீல்குந்த் கிராஸ் சென்ற தப்ரேசிடம், புதையலில் கிடைத்தவை என்று கூறி சில தங்க நாணயங்களை ரமேஷ் கொடுத்துள்ளார். விஜயபுராவுக்கு கொண்டு வந்து, அவை உண்மையான தங்க நாணயங்கள் என்பதை தப்ரேஸ் உறுதி செய்து கொண்டார்.

அதன் பின், தாவணகெரேயில் மீண்டும் ரமேசை சந்தித்து, 12 லட்சம் ரூபாய் கொடுத்து, இரண்டு கிலோ தங்கத்தை வாங்கி வந்தார். அவற்றை 80 லட்ச ரூபாய்க்கு விற்கலாம் என ரமேஷ் கூறியிருந்தார்.

பெங்களூரு வந்து அவற்றை பரிசோதித்தபோது, தான் ஏமாற்றப்பட்டதை தப்ரேஸ் உணர்ந்தார். ஏப்ரல் 25ம் தேதி ரமேஷ் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

அன்றைய தினமே, ஆர்.டி., நகர் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த ஏட்டு மெஹபூப் என்பவர், தப்ரேசை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, பணம் பறிகொடுத்தது தொடர்பாக பேச வரும்படி அழைத்துள்ளார்.

அங்கு வந்த தப்ரேசிடம், 'போலி தங்கத்தை, 12 லட்சம் ரூபாய்க்கு நீங்கள் வாங்கிய தகவல் எங்களுக்கு கிடைத்தது. போலீசார் தாவணகெரே சென்றுள்ளனர்' என கூறி, புகாரையும் வாங்கிக் கொண்டு அனுப்பினார்.

இரண்டு நாட்களுக்கு பின், அதே போலீஸ் நிலையத்தை சேர்ந்த ஏட்டு யுவராஜ், தப்ரேசை தொடர்பு கொண்டு, 'நீங்கள் பறிகொடுத்த 12 லட்சம் ரூபாயில், எட்டு லட்சம் ரூபாயை போலீசார் மீட்டுவிட்டனர். இதில், எங்களுக்கு 75,000 ரூபாய் கொடுங்கள்' என கேட்டுள்ளனர்.

அவரும் பணம் கிடைத்தவரை லாபம் என நினைத்து, இரு ஏட்டுகளுக்கும் மொத்தம் 75,000 ரூபாய் கொடுத்துள்ளார். அதன் பின், அவருக்கு பணத்தை இரு ஏட்டுகளும் கொடுக்கவில்லை.

ஆர்.டி., நகர் போலீசில் நண்பர்கள் வாயிலாக விசாரித்தபோது, அவ்வாறு எந்த சோதனையும் நடத்தப்படவில்லை என்பதை தப்ரேஸ் தெரிந்து கொண்டார்.

உடனடியாக சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார், ஏட்டுகள் மெஹபூப், யுவராஜை கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள ரமேஷை தேடி வருகின்றனர். மூவருக்கும் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது என்று விசாரிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டதால், இரு ஏட்டுகளும் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Advertisement