ஆயுள் தண்டனை கைதிக்கு 60 நாள் பரோல்

பெங்களூரு: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிக்கு, மகளின் திருமணத்துக்காக, 60 நாட்கள் பரோல் வழங்கி, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு பாகலுாரை சேர்ந்தவர் பஹத். 2017ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். விசாரணை நடத்திய கீழமை நீதிமன்றம், பஹத்துக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

ஏழு ஆண்டுகளாக பரோலில் கூட செல்லாமல் பஹத், சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், பஹத்தின் மனைவி அப்சனா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், 'எங்கள் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகளில் ஈடுபட, என் கணவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்' என கேட்டிருந்தார். இதற்கு அரசு தரப்பு வக்கீல் ஆட்சேனை தெரிவிக்கவில்லை.

நீதிபதி நாகபிரசன்னா பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

பஹத்துக்கு பரோல் வழங்குவதில் அரசு தரப்பு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. எனவே, அவருக்கு 60 நாட்கள் பரோலில் செல்ல, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடுகிறேன்.

பரோலில் இருக்கும் பஹத், வாரத்தில் ஒரு நாள் அப்பகுதி போலீஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும். பரோல் முடிந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அவர் செல்வதை, அப்பகுதி போலீசார் உறுதி செய்ய வேண்டும்.

அவர் சிறைக்கு திரும்புவதற்கான விதிகளை, சிறைச்சாலை கண்காணிப்பாளர் அமல்படுத்த வேண்டும். பரோல் காலத்தில் எந்தவித குற்றச்சம்பவங்களிலும் பஹத் ஈடுபடக்கூடாது.

இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement