கர்நாடகாவில் நிகழ்ச்சி நடத்த தடை மன்னிப்பு கோரினார் சோனு நிகம்

பெங்களூரு: கன்னடர்களை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த, பாடகர் சோனு நிகமின் இசை நிகழ்ச்சிக்கு கர்நாடகாவில் தடை விதித்து, திரைப்பட வர்த்தக சபை உத்தரவிட்டுள்ளது.
'கன்னடம்... கன்னடம்...' என்று ஒரு ரசிகர் கூச்சல் போட்டதை, பஹல்காம் தாக்குதலுடன் ஒப்பிட்டு, பெங்களூரில் இசை நிகழ்ச்சி நடத்தியபோது பிரபல பாடகர் சோனு நிகம் பேசியிருந்தார். இது சர்ச்சையை கிளப்பியது.
கர்நாடக ரக் ஷன வேதிகே அளித்த புகாரின்பேரில், விசாரணைக்கு ஆஜராகும்படி சோனு நிகமுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் சோனு நிகம் இசை நிகழ்ச்சிகள் நடத்தவும், அவருடன் கன்னட திரை உலகினர் மேடையை பகிர்ந்து கொள்ளவும் தடை விதிக்க வேண்டுமென, கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு, பல கன்னட அமைப்புகள் அழுத்தம் கொடுத்தன.
இந்நிலையில் திரைப்பட வர்த்தக சபையின் கூட்டம் அதன் தலைவர் நரசிம்மலு தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பின் நரசிம்மலு கூறுகையில், ''பாடகர் சோனு நிகம் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. இதனால் கர்நாடகாவில் அவர் இசை நிகழ்ச்சிகள் நடத்தவும், கன்னட திரை உலகினர் அவருடன் மேடையை பகிரவும் தடை விதிக்கப்படுகிறது. ஒருவேளை சோனு நிகம் மன்னிப்பு கேட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி பின்னர் முடிவு செய்யப்படும்,'' என்றார்.
இதற்கிடையில் சோனு நிகம், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பதிவு:
கர்நாடகா மட்டுமல்ல, உலகின் வேறு எங்கு நான் சென்றாலும் மக்கள் எனக்கு நிறைய அன்பு கொடுத்துள்ளனர். உண்மையில் பிற மொழி பாடல்களை விட, கன்னட பாடல்கள் மீது எனக்கு பற்று உள்ளது.
கர்நாடகாவில் நான் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் போதெல்லாம், ஒரு மணி நேரத்திற்கு மேல் கன்னட பாடல் பாடுவதற்காக என்னை தயார்படுத்திக் கொள்கிறேன்.
யாரிடம் இருந்தும் அவமானத்தை ஏற்றுக்கொள்ள நான் இளைஞர் இல்லை. எனக்கு 51 வயது ஆகிறது. என் வாழ்க்கையின் இரண்டாம் பாதியில் உள்ளேன்.
என் மகன் வயது உடைய இளைஞர் என்னை மிரட்டும்போது கோபப்பட எனக்கு உரிமை உள்ளது. என்னை மிரட்டிய இளைஞரிடம் நான் பணிவாக தான் பேசினேன். என் மீது என்ன தவறு உள்ளது என்று சொல்லுங்கள்.
நான் ஒரு தேச பக்தராக இருப்பதால், பஹல்காம் நடந்த சம்பவத்திற்கு பின் ஜாதி, மொழி, மதத்தின் பெயரால் வெறுப்பை உருவாக்க நினைப்பவர்கள் மீது எனக்கு கோபம் வருகிறது.
யார் தவறு செய்தனர் என்று முடிவு எடுக்கும் அதிகாரத்தை கர்நாடக மக்களிடம் விட்டுள்ளேன். உங்கள் தீர்ப்பை மனதார ஏற்றுக்கொள்கிறேன். போலீஸ் துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் நேற்றிரவு வெளியிட்ட பதிவில், 'சாரி கர்நாடகா. உன் மீதான அன்பு, என் ஈகோவை விட பெரியது. எப்போதும் உன்னை நேசிக்கிறேன்' என்று சோனு நிகம் கூறி உள்ளார்.
மேலும்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்
-
வடகாட்டில் இரு தரப்பினரிடம் ஏற்பட்ட மோதலால் 10 க்கு மேற்பட்டவர்கள் காயம் : ஒருவருக்கு அருவாள் வெட்டு