'பாக்., நாட்டினரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை'

பெங்களூரு: மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:

கர்நாடகாவில் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு, நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. பீஹார் மாநிலத்தில் குற்றங்கள் அதிகம் நடப்பதாக, நாம் பேசி வந்தோம். ஆனால் தற்போது பீஹாரில் அமைதி நிலவுகிறது.

நம் மாநிலத்தில் அமைதியின்மை உள்ளது. காங்கிரஸ் அரசு உயிருடன் இருக்கிறதா, இறந்துவிட்டதா என்ற சந்தேகம் மாநில மக்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

நான் எந்த மாநிலத்திற்கு சென்றாலும், உங்கள் மாநிலத்திற்கு என்ன ஆனது என்று என்னிடம் கேட்கின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் குற்றவாளிகள் கையில் மாநிலம் சென்றுவிடுகிறது.

ஹூப்பள்ளியில் போலீஸ் நிலையத்திற்கு தீ வைத்தவர்கள்; மைசூரில் வன்முறை செய்தவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது. சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் சுதந்திரமாக உள்ளனர்.

கடந்த முறை காங்கிரஸ் ஆட்சியில் 23 ஹிந்துக்களை நாம் இழந்தோம். மத்திய அரசின் முடிவால் ருத்ரேஷ், பிரவீன் நெட்டார் கொலை வழக்கை என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது.

மங்களூரு, மைசூரு, சுள்ளியா, புத்துாரில் பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள், சமூக விரோத செயல்களுக்கு நிதி கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பி.எப்.ஐ., அமைப்பை தடை செய்து திடமான முடிவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்தது. பி.எப்.ஐ., அமைப்பினர் தற்போது எஸ்.டி.பி.ஐ.,யில் சேர்ந்துள்ளனர்.

மாநிலத்தில் சித்தராமையா அரசு இருக்கும் தைரியத்தில், ஒரு சமூகத்தினர் கொலையை சர்வ சாதாரணமாக செய்கின்றனர். மாநிலத்தில் இருந்து பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களை வெளியேற்ற, காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாங்கள் மக்களிடம் கையெழுத்து இயக்கம் துவங்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். பின், மல்லேஸ்வரத்தில் உள்ள கடைகளுக்கு சென்று, பாகிஸ்தான் நாட்டினரை கர்நாடகாவில் இருந்து வெளியேற்றும்படி கையெழுத்து இயக்கத்தை ஷோபா துவக்கி வைத்தார். ஏராளமான மக்கள் கையெழுத்திட்டனர்.

Advertisement