சுஹாஸ் கொலையில் வெளிநாட்டு தொடர்பு?

பெங்களூரு: ''சுஹாஸ் ஷெட்டி கொலையில், வெளிநாட்டு தொடர்பு உள்ளதா என்பது விசாரணைக்கு பின் தெரியவரும்,'' என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.

பெங்களூரு சதாசிவ நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

சுஹாஸ் ஷெட்டி கொலையில் வெளிநாட்டு தொடர்பு உள்ளதா என்பது விசாரணைக்கு பின் தெரியவரும். யார் பணம் கொடுத்தனர், எவ்வளவு கொடுத்தனர் என்பதும் தெரியும். நாங்களாக யூகித்துக் கூற முடியாது.

சுஹாஸ் ஷெட்டி, ரவுடித்தனம் செய்ததால், ரவுடிகள் பட்டியலில் இடம் பிடித்திருந்தார். அவர் மீது போலீசார் பல வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் ஹிந்து பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். யார் மிரட்டல் விடுத்தாலும், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பழிவாங்கும் அரசியல் என்றால், என்ன என்று எனக்கு தெரியாது. எம்.எல்.ஏ., மீது தேவையின்றி எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய முடியாது.

தன் அறிக்கையில், சட்டத்துக்கு புறம்பாக கூறிய தகவல் தொடர்பாக பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அறிக்கையில் என்ன இருந்தது என்று எனக்கு தெரியாது. அவர் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.

'ஹனி டிராப்' வழக்கு மூடப்பட்டுவிட்டது என்று பா.ஜ., கூறுவதில் உண்மையில்லை. இவ்வழக்கை மூடி மறைப்பதில் என்ன பயன் உள்ளது?

சி.ஐ.டி.,யிடம் ராஜண்ணா என்ன வாக்குமூலம் கொடுத்தார் என்பது தெரியாது. சில தகவல்கள் மட்டுமே ஊடகத்தில் வெளியாகி உள்ளன. ராஜண்ணாவின் வாக்குமூலத்தின்படி விசாரணை நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement