எஸ்.சி., பிரிவினரில் உள் ஒதுக்கீடுm2 மாதங்களில் அமல்!

கர்நாடகாவில் கடந்த மாதம் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கு காங்கிரசில் உள்ள முக்கிய சமுதாயங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

முதல்வர் சித்தராமையாவும், “அறிக்கை தொடர்பாக, அமைச்சரவையில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும்,” என, உறுதி அளித்திருந்தார்.

அதேவேளையில், கர்நாடகாவில் எஸ்.சி., பிரிவினரில், 101 உட்பிரிவுகள் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அச்சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கே குழப்பம் இருந்தது.

துவக்கம்



இதை நிவர்த்தி செய்யும் வகையில், மாநிலம் முழுதும் எஸ்.சி., பிரிவினரை கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது. இப்பணி வரும் 17ம் தேதி வரை நடக்கிறது.

இதுதொடர்பாக பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:

உள் ஒதுக்கீடு அளிக்க மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்று கடந்தாண்டு ஆகஸ்ட் 1ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு; ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையிலான ஒரு நபர் கமிஷன் பரிந்துரையின் படி, நேற்று எஸ்.சி., பிரிவினரை கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது. இது பொது ஜாதிவாரி கணக்கெடுப்பு அல்ல. எஸ்.சி., சமுதாயத்தினரை கணக்கிட மட்டும் நடத்தப்படுகிறது.

முதல்கட்டமாக, மே 5 முதல் 17ம் தேதி வரை வீடு வீடாக சென்று ஆசிரியர்கள் கணக்கெடுப்பு நடத்துவர். இரண்டாம் கட்டமாக மே 19 முதல் 20ம் தேதி வரை சிறப்பு முகாம் அமைக்கப்படும்.

அப்போது, வீடு வீடாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை தவறவிட்டவர்கள், இம்முகாமில் பதிவு செய்யலாம். மே 23ம் தேதி வரை ஆன்லைனிலும் தங்கள் தகவல்களை தாங்களாகவே பதிவு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

65,000 ஆசிரியர்கள்



கணக்கெடுப்புப் பணியில் 65,000 ஆசிரியர் - ஆசிரியைகள் ஈடுபடுவர். ஒவ்வொரு 12 பேர் கொண்ட குழுவை, ஒருவர் மேற்பார்வையிடுவார். இப்பணிக்காக மாநில அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.

இதற்காக, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய, 84813 59000 என்ற உதவி எண்ணும் அமைக்கப்பட்டு உள்ளது. தரவுகளை பதிவு செய்ய உருவாக்கப்பட்ட செயலியில், சர்வேயர்கள் பயன்படுத்துவர். வாக்காளர் பட்டியலை பயன்படுத்தி சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு செல்வர். எஸ்.சி., சமுதாய மக்கள் வசிக்கும் வீடுகளில் வசிப்போரின் அனைத்து தகவல்களும், அவர்களின் சமுதாயம், உட்பிரிவு குறித்தும் பதிவு செய்யப்படும்.

கணக்கெடுப்பில் ஈடுபடும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. முந்தைய சதாசிவ கமிஷன், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் எஸ்.சி., சமுதாய மக்கள்தொகை தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும், ஆதி திராவிடர், ஆதி கர்நாடகா, ஆதி ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு எஸ்.சி., துணைக்குழுவுக்கான உள் ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க, துல்லியமான, புதுப்பிக்கப்பட்ட, அறிவியல் தரவு இப்போது தேவைப்படுகிறது. சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி, கர்நாடகாவில் எஸ்.சி., பிரிவினரை கணக்கெடுக்கும் பணிகள் முடிந்து, இரண்டு மாதங்களில் உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

“எஸ்.சி., பிரிவினரை கணக்கெடுக்கும் பணிகள் முடிந்து, உள் ஒதுக்கீடு எப்போது அமல்படுத்துவீர்கள்?” என, பா.ஜ., - எம்.பி., கோவிந்த் கார்ஜோல் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், முதல்வர் நேற்று விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று சிறப்புமிக்க கணக்கெடுப்பு துவங்கி உள்ளது. எஸ்.சி., பிரிவு மக்கள்தொகை அதிகரித்துள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காகவே, இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில் எந்தவித குழப்பமும், சந்தேகமும் வேண்டாம்.

எச்.சி.மஹாதேவப்பா,

அமைச்சர், சமூக நலத்துறை

Advertisement