சிக்கமகளூரில் கடை அடைப்பு

சிக்கமகளூரு: பஜ்ரங் தள் பிரமுகர் சுஹாஸ் கொலையை கண்டித்து, சிக்கமகளூரு மாவட்டத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அனுமதியின்றி போராட்டம் நடத்திய, சிக்கமகளூரு மாவட்ட பா.ஜ., தலைவர் தேவராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தட்சிண கன்னடா பன்ட்வாலை சேர்ந்த பஜ்ரங் தள் தொண்டர் சுஹாஸ் ஷெட்டி, கடந்த 1ம் தேதி மங்களூரு பஜ்பே கின்னிபதவு பகுதியில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையையும், பஹல்காம் தாக்குதலையும் கண்டித்து சிக்கமகளூரு மாவட்டத்தில் மே 5ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என, பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் அழைப்பு விடுத்தன.

எனினும் பொது போக்குவரத்துக்கு எந்த இடையூறும் செய்ய மாட்டோம் என, அமைப்பினர் உறுதி அளித்தனர். இதன்படி, நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை.

தாங்களாகவே முன்வந்து வர்த்தகர்கள் நேற்று காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை கடைகளை அடைத்தனர்.

80 சதவீதம்



சிக்கமகளூரு டவுனில் 80 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில், ஒரு சில கடைகள் திறந்திருந்தன. ஆனால் சிருங்கேரி, என்.ஆர்.புரா, கொப்பா, மூடிகெரே, கலசா பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன.

'கடைகளை அடைக்கும்படி யாரையும் வற்புறுத்தக் கூடாது; அப்படி வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் மீனா நாகராஜ், எஸ்.பி., விக்ரம் அமதே ஆகியோர் எச்சரித்திருந்தனர்.அறிவித்து இருந்தனர்.

வழக்கம்போல் பஸ்கள்



மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களில் தலைநகரங்கள், முக்கிய சந்திப்புகளில் நேற்று காலை முதல் பா.ஜ., பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சுஹாஸ் கொலை வழக்கை என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என, கோரினர்.

கடையடைப்புப் போராட்டத்தையொட்டி மாவட்டம் முழுதும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹிந்து அமைப்புகளின் சில தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிக்கமகளூரு டவுன் ஆசாத் பார்க் பகுதியில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, சிக்கமகளூரு மாவட்ட பா.ஜ., தலைவர் தேவராஜ் உட்பட 20 பேரை போலீசார் கைது செய்து, வேன்களில் ஏற்றிச் சென்றனர். சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடின. யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல், போராட்டக்காரர்கள் அமைதியாக போராட்டம் நடத்தினர்.

பார்ட்டி வீடியோ வைரல்

சுஹாஸ் கொலையில் கைதாகி உள்ள, சிக்கமகளூரின் கலசாவை சேர்ந்த நாகராஜ், ரஞ்சித் ஆகியோர் கடந்த மாதம் 3ம் தேதி கலசாவில் உள்ள ரெசார்ட்டில் நடந்த, மது விருந்தில் கலந்து கொண்ட வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.அந்த விருந்தில் தான் சுஹாஸ் கொலைக்கு திட்டம் தீட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. சுஹாஸ் கொலையில் கைதான 8 பேரின் மூன்று நாள் போலீஸ் காவல் நேற்று நிறைவு பெற்றது.எட்டு பேரும் மங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீண்டும் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க, போலீஸ் தரப்பு அனுமதி கேட்டதால், வரும் 9ம் தேதி வரை போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Advertisement