தேவையின்றி பணம் செலவு செய்யாதீர்கள்! கலெக்டர்களுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவு

பெங்களூரு: “தேவைப்பட்டால் மட்டும் ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி கொடுங்கள்; தேவையின்றி பணத்தை செலவு செய்யாதீர்கள்,” என, கலெக்டர்களுக்கு, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
கோடையில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் சமாளிப்பது குறித்து, மாவட்ட கலெக்டர்கள், சி.இ.ஓ.,க்களுடன், பெங்களூரு விதான் சவுதாவில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக முதல்வர் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினர்.
அவர் பேசியதாவது:
கோடையில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் தடுக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள். மாநிலத்தில் எந்த பகுதியிலும் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
குடிநீர் மேலாண்மைக்கு நிதி பற்றாக்குறை இல்லை. பஞ்சாயத்து ராஜ் துறைக்கு, அரசு ஏற்கனவே ரூ.60 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் அவசர குடிநீர் விநியோகத்திற்கான திட்டங்களை வகுத்து, பணிக்குழுக்களிடம் ஒப்புதல் பெற்றுக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும், கிராமங்களில் உள்ள பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க திட்டம் வகுக்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதிக்க வேண்டும்.
தேவையின்றி ஆழ்துளை கிணறு அமைக்க பணத்தை செலவிட வேண்டாம். கடந்த ஆண்டை விட மாநிலத்தில், இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பு 55 சதவீதம் மழை, அதிகமாக பதிவாகி உள்ளது.
மாநிலத்தின் 27 மாவட்டங்களில் வழக்கத்தை விட, அதிக மழை பெய்துள்ளது. அனைத்து நீர்த்தேக்கங்களிலும் 50 முதல் 60 சதவீதம் வரை நீர் உள்ளது. பருவமழை தாமதமாக பெய்தால் 6,319 கிராமங்களில் குடிநீர் பிரச்னை ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது 551 கிராமங்களில் குடிநீர் பிரச்னை இருக்கிறது. இதில் 123 கிராமங்களுக்கு டேங்கர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் மின்சாரம் ஜார்ஜ், வருவாய் கிருஷ்ணபைரே கவுடா, சுகாதாரம் தினேஷ் குண்டுராவ், தொழில் துறை எம்.பி.பாட்டீல், கிராம பஞ்சாயத்து ராஜ் பிரியங்க் கார்கே, மருத்துவ கல்வி சரண்பிரகாஷ் பாட்டீல், புள்ளியியல் டி.சுதாகர், தலைமை செயலர் ஷாலினி, பல துறைகளின் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!