தீராத நோய்களை தீர்க்கும் ஸ்ரீவைத்ய நாதேஸ்வரா கோவில்

மனிதர்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவு தான் செல்வ, செழிப்பு இருந்தாலும் ஆரோக்ய குறைபாடு இருந்தால் வாழ்க்கை, மகிழ்ச்சியாக இருக்காது. மருத்துவமனைக்கு சென்று லட்சக்கணக்கில் செலவு செய்து சிகிச்சை பெற்றாலும் நோய்கள் தீருவதில்லை. இதனால் கடைசி முயற்சியாக கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு இருப்பவர்களும் உள்ளனர்.

இந்நிலையில் தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் கோவிலாக ஸ்ரீ வைத்ய நாதேஸ்வரா கோவில் உள்ளது.

இக்கோவில் துமகூரு அருகே சன்னிகனப்பனபாளையா என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.

சிவனை தொடர்ந்து தரிசனம் செய்து, கோவிலில் கொடுக்கும் தீர்த்தத்தை வாங்கிக் குடித்தால் தீராத நோயும் தீர்ந்துபோகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். கோவில் அமைந்திருக்கும் இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு 1,000க்கும் மேற்பட்ட முனிவர்கள் ஒன்றாக கூடி தவம் செய்தனர் என்றும் கூறப்படுகிறது.

குழந்தை இல்லாத தம்பதி இங்கு வந்து ஒன்பது வார காலம் தொடர்ந்து பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இரவில் கோவிலை சுற்றிநாக பாம்புகள் ஊர்ந்து செல்கின்றன. கோவிலுக்குள் திருடர்கள் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக, கோவிலை பாதுகாக்கும் அரணாக பாம்புகள் உள்ளதாக அர்ச்சர்கள் கூறுகின்றனர். வாரந்தோறும் திங்கட்கிழமை, விசேஷ நாட்களில் கோவில்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. சிவராத்திரி அன்று ரத உத்சவம் நடக்கிறது.

தினமும் காலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். பெங்களூரில் இருந்து 87 கி.மீ., துாரத்தில் கோவில் அமைந்துள்ளது.

மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி துமகூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன.

துமகூரு பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அரசு பஸ்கள் செல்கின்றன.


ரயிலில் செல்பவர்கள் துமகூரு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ மூலம் கோவிலை சென்று அடையலாம்

- நமது நிருபர் -.

Advertisement