அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆண்கள் தங்குமிடத்தில் வசதிகள்

விருதுநகர்: விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் உடன் வரும் ஆண்கள் தங்குமிடத்தில் அலைபேசி சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இங்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பிரசவம், சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்களோடு வரும் உறவினர்கள் குறிப்பாக பெண்கள் தங்குவதற்கு இரு மாதங்களுக்கு முன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் செலவில் கதவுகளுடன் கூடிய காத்திருப்பு அறை திறக்கப்பட்டது.

அம்மா உணவகம் அருகில் உள்ள நோயாளிகள் தங்குமிடம், கூரையின் கீழே திறந்தவெளியில் உள்ளது. குழந்தை மருத்துவப் பிரிவில் ஆண்கள் தங்க அனுமதி இல்லாததால் இங்கு அவர்கள் தங்கிக் கொள்கின்றனர். இரவில் போதிய வெளிச்சமின்றியும், மின்விசிறிகளின்றி கொசுக் கடியிலும் சிரமப்பட்டனர். இவர்கள் நலன் கருதி மருத்துவமனை சார்பில் ரூ. 2,000 செலவில் 4 புதிய எல்.இ.டி., மின்விளக்குகள், 3 புதிய மின்விசிறிகள், அலைபேசி சார்ஜ் செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் திறந்தவெளி என்பதால் இலைச் சருகுகள், பிளாஸ்டிக் குப்பை நிறைந்து காணப்படுகிறது. துாய்மைப் பணியாளர்கள் மூலம் அவற்றை அப்புறப்படுத்தி சுகாதாரம் காக்க வேண்டுகோள் விடுத்தனர்.

Advertisement