உழவர் சந்தையில் குலுக்கல் முறையில் விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு தெருவோர கடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

பரமக்குடி: பரமக்குடி உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு கடைகளை முறை படுத்தாமல், சில வெளி நபர்கள் வியாபாரம் செய்த நிலையில், குலுக்கல் முறையில் கடைகளை ஒதுக்கீடு செய்வதாக மாவட்ட வேளாண் வணிக துணையினர் தெரிவித்துள்ளனர்.

பரமக்குடி உழவர் சந்தை 25 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டு, 70 கடைகள் செயல்படுகிறது.

இங்கு விவசாயிகள் தங்களது விளை பொருட்களை நேரடியாக விற்கின்றனர். இந்நிலையில் விவசாயிகள் சிலர் வராத சூழலில், வெளி வியாபாரிகள் ஆதிக்கம் செலுத்துவதாக புகார் வந்தது. இது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகியது.

தினமும் அதிகாலை 5:00 மணிக்கு உழவர் சந்தை துவங்கும் நிலையில் 5:50 மணிக்கு குலுக்கல் முறையில் விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படுகிறது. இதற்கு எந்த கட்டணமும் கிடையாது.

158 விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்ட நிலையில், தினமும் 70 விவசாயிகள் வருகின்றனர். இங்கு 14 முதல் 15 மெட்ரிக் டன் காய்கறிகள் 6 முதல் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் விற்கிறது. மேலும் எடைத்தராசு இலவசமாக வழங்கப்படுகிறது, என மாவட்ட வேளாண் வணிக துணை இயக்குநர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சந்தை வளாகத்தைச் சுற்றி தெருவை ஆக்கிரமித்து கடைகள் உள்ளதால் சில நேரங்களில் விற்பனை பாதிக்கிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர்.

Advertisement