போராட்டம் எதிரொலி; வடிகால் பணி துவக்கம்

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி 46 வது வார்டுக்கு உட்பட்ட போயர் காலனி பகுதி உள்ளது. இங்குள்ள சாக்கடை கால்வாய் சேதமான நிலையில் புதிய வடிகால் கட்டும் பணிக்கு திட்டமிடப்பட்டது. இதில் அத்தெருவில் ஒரு பாதியை விட்டு மறுபாதியில் மட்டும் பணி துவங்கி நடந்து வந்தது. ஒரு பகுதியில் வடிகால் கட்டாமல், அதை தவிர்த்து விட்டு, எதிர் திசையில் கழிவு நீர் செல்லும் விதமாகவும் கட்டுமானப் பணி நடந்தது.

ஆவேசமடைந்த அப்பகுதியினரும், பா.ஜ., நிர்வாகிகளும், கட்டுமானப் பணியை தடுத்து முழுமையாக வடிகால் கட்ட வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க., தவிர்த்த மாற்று கட்சியினர் வசிக்கும் பகுதி என்பதால் அப்பகுதி புறக்கணிக்கப்பட்டதாக புகார் தெரிவித்தனர்.உடனடியாக அப்பகுதியையும் வடிகால் பணிக்கு இணைத்து பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதற்காக அங்கிருந்த பழைய வடிகால் கட்டுமானம் இடித்து அகற்றும் பணி துவங்கியது. அங்கு புதிய வடிகால் கட்டி அந்த வீதியில் முழுமையாக வடிகால் கட்டும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

Advertisement