குடிநீர் பற்றாக்குறை; கழிவுநீரால் சுகாதாரக்கேடு அனுப்பபட்டி மக்கள் தவிப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் அனுப்பபட்டி ஊராட்சியில் பொது மக்கள் குடிநீருக்கு தவிக்கின்றனர். போர்வெல் மூலம் கிடைக்கும் நிலத்தடி நீர் உப்புக்கரிப்பதால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இவ்வூராட்சியில் அனுப்பபட்டி, மேக்கிழார்பட்டி, கூத்தமேடு, ரெங்கராம்பட்டி உள்ளிட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். பாலக்கோம்பை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

குழாய் இணைப்பின் கடைசி பகுதியில் உள்ள கிராமத்திற்கு குடிநீர் போதுமான அளவு கிடைப்பது இல்லை.

'ஜல் ஜீவன்' திட்டப் பணிகள் முடிந்தும் குடிநீர் வினியோகம் இன்னும் துவங்கவில்லை. ரெங்கராம்பட்டி, கூத்தமேடு, மேக்கிழார்பட்டி கிராமங்களில் குடியிருப்புக்களில் போதுமான அளவு கழிவுநீர் வடிகால் வசதி இல்லை.

ஊராட்சி மக்கள் கூறுவது என்ன:

குடிநீர் வினியோகம் பாதிப்பு



எஸ்.கற்பகதேவி, கூத்தமேடு: கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பல வாரங்களாக குடிநீர் வினியோகம் இல்லை. 'போர்வெல்' மூலம் கிடைக்கும் நீரை குடிநீராக பயன்படுத்துகிறோம்.

சில நேரங்களில் மோட்டார் ரிப்பேர் என்று சொல்லி விநியோகம் பாதிக்கிறது. நிலத்தடி நீரில் உப்புச்சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது.

பாத்திரங்களில் பிடித்து வைத்த நீரில் உப்பு படிமங்கள் சேர்கின்றன. தொடர்ந்து பயன்படுத்துவதால் சிறுநீரக கல் அடைப்பு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் ஆங்காங்கு தேங்கி விடுகிறது. மழைக் காலங்களில் கழிவுநீருடன் மழை நீரும் கலந்து பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு ஊராட்சி தீர்வு காண வேண்டும், என்றார்.

சேதமடைந்த சமையல் கூடம்



பி.பொன்இருளன், மேக்கிழார்பட்டி: குடிநீர் விநியோகத்திற்காக கிராமங்கள் முழுவதும் குழாய் பதித்தும் குடிநீர் கிடைக்கவில்லை. கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடம் பராமரிப்பு இன்றி உள்ளது.

சுற்றுச்சுவர் இல்லாததால் சமுதாயக்கூட வளாகத்தில் குப்பை குவிந்து சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது.

மழைக் காலங்களில் பூச்சிகள் தொந்தரவு உள்ளது. சமுதாய கூட்டத்திற்கான சமையல் கூடம் சேதமடைந்து உள்ளது. தண்ணீர் வசதியும் இல்லை. கிராமத்தின் மேற்குப் பகுதியில் சின்டெக்ஸ் தொட்டிகள் சேதம் அடைந்து சரி செய்யப்படவில்லை.

ரேஷன் கடை பள்ளமான இடத்தில் உள்ளது. பள்ளத்தை சரி செய்ய குப்பை கலந்த மண் கொட்டி உள்ளனர். இப்பகுதியில் சிமென்ட் தளம் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.

புதிய கழிப்பறை வேண்டும்



கே.மணிவாசகம், ரெங்கராம்பட்டி: குடிநீரை 2 கி.மீ., துாரம் சென்று பிடித்து வர சிரமமாக உள்ளது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கியும் பயன்படுத்த வேண்டி உள்ளது.

இப்பகுதியில் உள்ள சேதமடைந்த பெண்கள் கழிப்பறையை அப்புறப்படுத்தி மாற்று இடத்தில் புதிய கழிப்பறை கட்ட வேண்டும்.

ஊர்காவலன் சாமி கோயில் அருகே சாக்கடை பாதி கட்டப்பட்டு மீதி அப்படியே விடப்பட்டுள்ளது. இப்பகுதியில் கழிவு நீர் வெளியேறி தெருவில் தேங்குகிறது.

பயன்பாட்டு நீருக்கானெ ெதொட்டி, அடிகுழாய் ஏதும் கிராமத்திற்கு இல்லை. ஜல் ஜீவன் திட்டத்தில் முதன் முதலில் இக்கிராமத்திற்கு குழாய் பதிக்கப்பட்டது. பக்கத்து கிராமங்களில் விநியோகம் உள்ளது.

ஆனால் ரெங்கராம்பட்டிக்கு குடிநீர் கிடைக்கவில்லை. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement