காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா.,வில் கடும் கண்டனம்; பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் சரமாரி கேள்வி

7


நியூயார்க்: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்தது.


பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா- பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விவாதம் நடத்தியது. அப்போது, பாதுகாப்பு சபை உறுப்பினர் நாடுகள் காஷ்மீர் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பேசிய உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள், பாகிஸ்தானை குறி வைக்கும் வகையில் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். 'தாக்குதல் சம்பவத்தை இந்திய ராணுவமே நடத்தியது' என்று கூறிய பாகிஸ்தானின் பொய்யை உறுப்பினர் நாடுகள் ஏற்க மறுத்தனர்.
அது மட்டுமின்றி, பாகிஸ்தானின் சமீபத்திய ஏவுகணை சோதனைகள், அணு ஆயுதப்போர் அச்சுறுத்தல் குறித்தும் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றங்களை அதிகரிக்கும் என குற்றம் சாட்டினர்.



பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நிரந்தர உறுப்பினர்களான சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை பங்கேற்றது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையின் போது, ​​பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து, பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்தினர்.


பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் அவர்களின் மதத்தின் அடிப்படையில் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு நிருபர்களிடம் பாகிஸ்தான் தூதர் அசிம் இப்திகார், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதாக எழுந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் தனது நாடு நிராகரித்ததாகக் கூறினார்.


சிந்து நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கூட்டத்திற்குப் பிறகு, துனிசிய தூதர் கலீத் முகமது கியாரி, மோதலுக்கு பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான தீர்வு தேவை என்றார்.


மே மாதத்திற்கான பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான கிரேக்க தூதர் எவாஞ்சலோஸ் செகெரிஸ், இந்த விவாதம் முக்கியமானது. பதற்றங்களுக்கு தீர்வு காண உதவிகரமாக இருக்கும் என்றார். பதற்றத்தை தணிக்க வேண்டும் என நாங்கள் நம்புகிறோம் என்று ரஷ்ய தூதர் ஒருவர் கூறினார்.

Advertisement