மே 20 வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர் சங்கமும் பங்கேற்பு

மதுரை: 'பென்ஷன் நிதி ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20ல் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் பங்கேற்கிறது' என தலைவர் பாஸ்கர், பொதுச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியிருப்பதாவது: மத்திய அரசு புதிய தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது தொழிலாளர்களின் உரிமைகளை பறித்துவிடும். சத்தீஸ்கர், ஜார்கண்ட், ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம் மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தாலும்பென்ஷன் நிதி ஆணையத்தில் செலுத்திய தொகையை திருப்பித்தர இயலாதுஎனமறுத்துள்ளது.

தேசிய பென்ஷன் திட்டத்திற்கு பதிலாக ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த முயற்சித்துள்ளது.

உரிமைகளை பாதுகாக்க, டில்லியில் மார்ச் 8ல் நடந்த தேசிய தொழிலாளர் மாநாட்டில் மே 20ல் தேசிய அளவில் நாடுதழுவிய வேலை நிறுத்த முடிவை எடுத்துள்ளனர்.

பென்ஷன் நிதி ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும். அங்கன்வாடி, சத்துணவில் பணியாற்றுவோரை நிரந்தர ஊழியராக்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட்சோர்சிங், கான்ட்ராக்ட் பணி நியமனங்களை நிரந்தரமாக்க வேண்டும். ஐந்தாண்டுக்கு ஒருமுறை குறைந்த பட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டை முழுவதுமாக நிறுத்த வேண்டும். இவற்றை வலியுறுத்தி தேசிய அளவில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதென கிருஷ்ணகிரி மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement