சரக்கு வேன்கள் மோதல் ஒருவர் பலி: மூவர் காயம்

தேவகோட்டை: தேவகோட்டை தேனம்மை ஊருணி தெற்கு பகுதியைச் சேர்ந்த நயினா முகமது மகன் சேக் அப்துல்லா 47, வெள்ளையன் ஊருணி அருகே இறைச்சிக் கடை நடத்தி வருகிறார்.

நேற்று அதிகாலை ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆட்டுச் சந்தையில் ஆடுகளை வாங்கி சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தேவகோட்டைக்கு வந்தார்.

வேனை முகமதியர் பட்டனம் ராவுத்தர் நயினாமுகமது 22., ஓட்டி வந்தார். எதிரே காரைக்குடியில் இருந்து மீன்கடைக்கு மீன்கள் வாங்க தொண்டிக்கு சரக்கு வேனில் காரைக்குடி மணிகண்டன் 24, சென்றார். காளீஸ்வரன் 22, ஓட்டி வந்துள்ளார்.

காலை 6:30 மணிக்கு மானம்புவயல் விலக்கு அருகே வரும்போது வேகத்தடுப்புகளை 2 வேன்களும் ஒன்றையொன்று கடக்க முயன்றபோது இரண்டு வேன்களும் மோதிக் கொண்டன. இதில் சேக் அப்துல்லா பலியானார். ராவுத்தர் நயினாமுகமது, காளீஸ்வரன், மணிகண்டன் காயமடைந்தனர். தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement