சி.பி.ஐ., இயக்குநர் பிரவீன் சூட் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

புதுடில்லி: சி.பி.ஐ., இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அமைச்சரவை நியமனக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
சி.பி.ஐ., எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநராக இருப்பவர் பிரவீன் சூட். இவரது பதவிக்காலம் வரும் மே 25ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், சி.பி.ஐ.,யின் புதிய இயக்குநரை தேர்வு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு, தற்போதைய இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க பரிந்துரை வழங்கியது. அதனை ஏற்று அவர் மீண்டும் சி.பி.ஐ.,யின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், அவர் 2026ம் ஆண்டு மே மாதம் வரை இந்தப் பொறுப்பில் இருப்பார்.
கர்நாடகா பிரிவு ஐ.பி.எஸ்., அதிகாரியான பிரவீன் சூட், கடந்த 2023ம் ஆண்டு சி.பி.ஐ., இயக்குநராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பு, கர்நாடக டி.ஜி.பி.,யாக பதவி வகித்து வந்தார்.
