தொட்டபெட்டா சிகரத்துக்கு வந்த காட்டு யானையால் பரபரப்பு; வெளியேற்றப்பட்ட சுற்றுலா பயணிகள்

ஊட்டி : ஊட்டி தொட்டபெட்டா வனப்பகுதிக்கு வந்த காட்டுயானையால், காட்சி முனைக்கு வந்த சுற்றுலா பயணிகளை, வனத்துறையினர் வெளியேற்றினர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கோடை சீசன் துவங்கியதை அடுத்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், ஊட்டியின் இயற்கை காட்சிகளை ரசிக்க தொட்ட பெட்டா சிகர காட்சி முனைக்கு செல்வது வழக்கம்.


இந்நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு தொட்டபெட்டா காட்சி முனையை ஒட்டிய வனப்பகுதியில் சுற்றி திரிந்த யானை காட்சி முனை பகுதிக்கு நுழைய வந்தது. தகவலின் பெயரில் சம்பவ பகுதிக்கு வன ஊழியர்கள் வந்து யானை, சுற்றுலா பயணிகள் இருந்த பகுதிக்கு வருவதை தடுத்தனர். பின்பு சுற்றுலா பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

ஊட்டி ரேஞ்சர் சசிகுமார் கூறுகையில்,''தொட்டபெட்டா சிகரத்துக்கு யானைகள் இதுவரை வந்ததில்லை. இன்று (நேற்று) மாலை யானை ஒன்று வந்து, தொட்டபெட்டா காட்சி முனைக்குள் நுழைய முயன்றது. உடனே வனத்துறை ஊழியர்கள் அங்கு வந்து சுற்றுலா பயணிகளை பாதுகாப்புடன் வெளியேற்றினர். கடைகளும் அடைக்கப்பட்டன. தொடர்ந்து, யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. கண்காணிப்பு தொடர்கிறது,''என்றார்.

Advertisement