வர்த்தகரிடம் ரூ.26.50 லட்சம் சுருட்டல் ஆசை காட்டி மோசம் செய்த பெண்

திருப்பூர்; ஆன்லைன் தங்கம் வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டித்தருவதாக கூறி, திருப்பூர் வர்த்தகரிடம், 26.50 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.

திருப்பூர், மங்கலத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ், 41; சோலார் பொருட்கள் விற்பனையாளர்.

கலெக்டர் கிறிஸ்துராஜிடம் நேற்று மனு அளித்த பாக்கியராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:

லித்தியா என்ற பெண், கோவை பூர்வீகம் என்றும், மும்பையில் பின்னலாடை ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் சமூக வலைதளம் வாயிலாக அறிமுகம் ஆனார். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகினார். ஆன்லைனில் தங்கம் வாங்கி விற்பனை செய்து, அதிக லாபம் ஈட்டுவதாக கூறியவர், என்னையும் முதலீடு செய்யவைத்தார்.

முதலில் 90 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தபோது, அதிக லாபம் கிடைத்தது. அடுத்தடுத்து அதிக தொகையை முதலீடு செய்யபோது, லாப தொகையை, எனது வங்கி கணக்கிற்கு மாற்றமுடியாதபடி வர்த்தக செயலியில் 'லாக்' செய்துவிட்டனர்.

லாப தொகையை மீட்பதற்காக, லித்தியா கூறியபடி, கடந்த ஏப்., 29 ம் தேதி, 26.50 லட்சம் ரூபாயை செலுத்தினேன்.

அந்த தொகையை பெற்றுக்கொண்ட அப்பெண் உள்பட மோசடி கும்பல், எனது மொபைல்போன் எண்ணை 'பிளாக்' செய்துவிட்டனர். ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தேன். நான் இழந்த பணத்தை மீட்டுத்தரக்கோரி, சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement