நட்டாவுக்கு குண்டு துளைக்காத வாகனம் தரப்பட்டது: டி.ஜி.பி.,
சென்னை: 'மத்திய அமைச்சர் நட்டாவுக்கு, குண்டு துளைக்காத வாகனம் வழங்கப்பட்டது. அதை அதிக வேகமாக இயக்கியதால் பின்பக்க சக்கரத்தில் உராய்வு ஏற்பட்டுள்ளது' என, காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய சுகாதார துறை அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா, மத்திய பாதுகாப்பு படையினருடன் கூடிய, 'இசட் பிளஸ்' பாதுகாப்பு பிரிவு உடையவர். அவர், மே 2ம் தேதி சென்னைக்கு வருகிறார் என்ற தகவல் அறிந்து, அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டன.
அவருக்கு குண்டு துளைக்காத வாகனம், அவருடன் மத்திய பாதுகாப்பு படையினர் பயணிக்க, இரண்டு வாகனங்களும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு பாதுகாப்பு படையினருக்கு மூன்று வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் அரசு மரபு வாகனமும் வழங்கப்பட்டன.
குண்டு துளைக்காத வாகனம், மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட பணிமனைகளில் தயாரிக்கப்பட்டு, பாதுகாப்பு பிரிவின் பயன்பாட்டில் நல்ல முறையில் இயங்கி வருகிறது. இந்த வாகனம், தொழில்நுட்ப காரணங்களால், அதிவேகமாக செல்லக்கூடாது என்ற நிபந்தனை உள்ளது.
கடந்த, 3ம் தேதி பல்கலை ஒன்றில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சர், அங்கிருந்து மதியம் புறப்பட்டு, வேலுார் பொற்கோவிலுக்கு சென்று, இரவு 8:40 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டில்லி செல்ல முயன்றார்.
அதற்காக மாலை, 5:30 மணிக்கு வேலுாரில் இருந்து புறப்பட்டு, சென்னை திரும்புகையில், இரவு 7:30 மணியளவில், தாம்பரம் அருகே வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் திருமுடிவாக்கம் அருகே வந்தார்.
குண்டு துளைக்க முடியாத வாகனம் என்பதால், தொழில்நுட்ப காரணங்களுக்காக, இதை மற்ற வாகனங்களுக்கு இணையாக இயக்குவது இல்லை. ஆனால், மத்திய அமைச்சரின் நேர்முக உதவியாளர் வற்புறுத்தியதால் மணிக்கு, 120 கி.மீ., வேகத்திற்கு இயக்கி உள்ளனர்.
இதனால், பின்பக்க சக்கரத்தில் உரசல் ஏற்பட்டு, ஓட்டுநர் அந்த வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தி உள்ளார். உடனடியாக மத்திய அமைச்சர், அரசின் மரபின்படி மாற்று வாகனத்தில், உரிய பாதுகாப்புடன், சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும்
-
12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்