பயங்கரவாதிகள் 100 பேர் கொல்லப்பட்டனர்; ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்

7

புதுடில்லி: ''இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் மூலம் குறைந்தது 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்'' என அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.


பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில், நேற்று நடந்த தாக்குதல் குறித்து விளக்குவதற்காக, டில்லியில் இன்று (மே 08) அனைத்து கட்சி கூட்டத்தையும் மத்திய அரசு கூட்டியது.


டில்லி பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நட்டா, நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ, காங்கிரஸ் தலைவர் கார்கே, காங்கிரஸ் எம்.பி., ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tamil News
Tamil News
அரசு தரப்பில் இருந்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் பேசினர். இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதல் குறித்த விபரங்களை, அனைத்துக் கட்சி தலைவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தலைவர்களின் சந்தேகங்களுக்கும் அவர்கள் விளக்கம் அளித்தனர்.



அனைத்துக் கட்சி கூட்டத்தில், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது: இந்தியா மீது தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தானை திருப்பி தாக்குவோம். இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் மூலம் குறைந்தது 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்னர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் தொடர்கிறது.



25 நிமிடம் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலுக்கு ஸ்கால்ப் ஏவுகணை மற்றும் ஹேமர் குண்டுகள் உட்பட அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷா இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.


பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. இந்தியா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவோம். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Advertisement