கொள்ளைக் கும்பல் சிக்கியது நகைகள், துப்பாக்கிகள் பறிமுதல்

புதுடில்லி:ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் மூன்று ஆண்டுகளில் 75 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த பீஹாரைச் சேர்ந்த கும்பலை டில்லி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 14 கைத்துப்பாக்கிகள், 255 தோட்டாக்கள், நகைகள், 3.78 லட்சம் ரூபாய் பணம், போலி அடையாள அட்டைகள் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

டில்லி மாநகரப் போலீசின் சிறப்புப் பிரிவு கூடுதல் கமிஷனர் பிரதிக்ஷா கோதாரா கூறியதாவது:

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபோத் சிங் தலைமையிலான கொள்ளைக் கும்பல், பல்வேறு மாநிலங்களில் தங்க நகைகளை கொள்ளையடித்து வந்தது.

உளவுத்துறை தகவல்படி மார்ச் 24ம் தேதி பீஹாரைச் சேர்ந்த சகல்தீப் பாஸ்வான்,24, மற்றும் பண்டுஷ் குமார்,19, ஆகிய இருவரும் டில்லியில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 10 கைத்துப்பாக்கிகள், 195 தோட்டாக்கள், போலி ஆதார் அட்டைகள் மற்றும் போலி டிரைவிங் லைசென்ஸ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சுபோத் சிங் ஆலோசனைப்படி இருவரும் டில்லியில் சில நகைக்கடைகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இருவரிடமும் நடத்திய விசாரணை அடிப்படையில் ஏப்ரல் 5ம் தேதி விகாஷ் குமார் என்ற ஜான் ரைட் கைது செய்யப்பட்டு, ஒரு துப்பாக்கி மற்றும் ஐந்து தோட்டாக்கள், ஐந்து தங்க மோதிரங்கள் மற்றும் இரண்டு தங்கச் சங்கிலிகள் - பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலே விகாஷ் தலைமறைவாக இருந்தார்.

இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 8ம் தேதி ரோஷன் குமார்,28 டில்லியிலும், ஏப்ரல் 10ம் தேதி பியுஷ் ஜெய்ஸ்வால் மற்றும் அவரது சகோதரர் யாஷ் ஆனந்த் ஆகியோர் அசாம் மாநிலம் குவஹாத்தியிலும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டில் இருந்து தங்க நகைகள், மின்னணு சாதனங்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், ஏப்ரல் 16 மற்றும் 20 ஆகிய தேதிகளில் டில்லியில் இருவரும் மறைத்து வைத்திருந்த இரண்டு துப்பாக்கிகள், 40 தோட்டாக்களும் மீட்கப்பட்டன.

அதேபோல, பீஹார் மாநிலம் ஹாஜிபூரில் ரோஹித் சுற்றி வளைக்கப்பட்டார். அவரது வீட்டில் இருந்து 3.78 லட்சம் ரூபாய் பணம், ஒரு துப்பாக்கி, 10 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தக் கும்பல், கடந்த 2022ம் ஆண்டு முதல் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் நகைக்கடன் வழங்கும் நிறுவனங்களை குறிவைத்து 75 கிலோ தங்க நகைகளை கொள்ளடியத்துள்ளது. மேலும், சட்டவிரோத துப்பாக்கி கடத்தலையும் செய்து வந்துள்ளனர்.

தற்போது சிறையில் உள்ள சுபோத் சிங், ஒவ்வொரு கொள்ளைக்கும் திட்டமிட்டுக் கொடுத்துள்ளார். உதய்பூர், கட்னி மற்றும் சம்பல்பூரில் நகைக் கடன் நிறுவனங்களில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை பல்வேறு இடங்களில் மறைத்து வைத்துள்ளனர். இந்தக் கும்பலிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement