தாக்குதல் நடத்தியது ஏன்: ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளிடம் இந்தியா விளக்கம்

1

புதுடில்லி: பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பினர்களிடம் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது.


பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பல நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை தொடர்பு கொண்டு விளக்கமளித்தார்.


இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு சபையில் இடம்பெற்றுள்ள 13 உறுப்பு நாடுகளின் உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளை மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி சந்தித்தார்.


இந்த சந்திப்பின் போது விக்ரம் மிஸ்ரா கூறியதாக வெளியான தகவல்: ஏப்.,22ல் நடந்த பயங்கரவாத தாக்குதல், இந்தியாவை ஆத்திரமூட்டும் செயல்.
பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடைய டிஆர்எப் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது. ஆனால், பிறகு பின்வாங்கியது.


இந்த தாக்குதல் சம்பவத்தில் ஐ.நா., சபையில் தீர்மானத்தை கொண்டு வர பாகிஸ்தான் கடுமையாக முயற்சித்தது. இதன் பின்னணியில் ஏதோ ஒரு சதி உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த தாக்குதல் குறிப்பிட்ட இலக்குகளை குறிவைத்து, கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட்டது. பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்கப்பட்டது.


பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், இந்தியாவும் தாக்குதல் நடத்தும். காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜெய்சங்கர் விளக்கம்



இதனிடையே , ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், கத்தார், பிரான்ஸ், ஜெர்மனி நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களை தொடர்பு கொண்ட நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளித்துள்ளார்.

Advertisement