ரோகித் சர்மா 'குட்-பை' * டெஸ்ட் அரங்கில் இருந்து...

மும்பை: டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா. ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தார் ரோகித் சர்மா 36. கடந்த 2024ல் சொந்தமண்ணில் நடந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் 0-3 என இந்தியா தோற்றது. அடுத்து ஆஸ்திரேலிய மண்ணில் 1-3 என கோப்பை இழந்தது. தவிர கேப்டன் ரோகித் 'பார்ம்', பாதாளத்துக்கு சென்றது.
சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டில் தானாக முன்வந்து அணியில் இருந்து விலகிக் கொண்டார். இதனால் விரைவில் ஓய்வு அறிவிப்பார் என நம்பப்பட்டது. பிரிமியர் தொடருக்குப் பின் இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட டெஸ்டில் பங்கேற்க உள்ளது.
இதற்கு முன் நேற்று திடீரென டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில்,' இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது பெருமையாக இருந்தது. தற்போது டெஸ்ட் அரங்கில் இருந்து விடை பெறுகிறேன். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க உள்ளேன்,' என தெரிவித்துள்ளார்.
அவசரம் ஏன்
ரோகித் சர்மா முதல் இரு டெஸ்டில் 177, 111 ரன் (எதிர்-வெ.இண்டீஸ்) விளாசினார். இதன் பின் டெஸ்டில் இவரது பார்ம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. 2017ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான விசாகப்பட்டனம் டெஸ்டில் துவக்க வீரராக களமிறங்கிய இவர், இரு இன்னிங்சில் 176, 127 என சதம் அடித்தார். அடுத்து ராஞ்சியில் இரட்டை சதம் (212) விளாசினார்.
கடந்த 2024ல் இவரது பார்ம் மோசமானது. கடைசியாக பங்கேற்ற 8 டெஸ்டில் (15 இன்னிங்ஸ்) ஒரு முறை மட்டும் அரைசதம் அடித்தார். 10 முறை ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டானார். இதன் சராசரி 10.93 ரன் என ஆனது.
விரைவில் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. இதில் ரோகித் நீக்கப்படலாம் என செய்தி வெளியாகின. இதையடுத்து முந்திக் கொண்ட ரோகித், தானாக முன்வந்து ஓய்வு பெற்றார்.
புதிய கேப்டன் யார்
ரோகித் ஓய்வு பெற்றதை அடுத்து, இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக பும்ரா அல்லது சுப்மன் கில் நியமிக்கப்படலாம். இதில் பும்ரா அடிக்கடி காயமடைவதால், சுப்மன் கில், டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படலாம்.
வெற்றிகரமான கேப்டன்
கடந்த 1983ல் இந்திய அணிக்கு முதன் முறையாக உலக கோப்பை (ஒருநாள்) வென்று தந்தார் கபில் தேவ். அடுத்து 2007ல் 'டி-20', 2011ல் ஒருநாள் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி வென்று தந்தார் தோனி. இதன் பின் இந்திய அணி 11 ஆண்டாக எவ்வித ஐ.சி.சி., தொடரிலும் சாதிக்கவில்லை.
அடுத்து 2023 ஒருநாள் உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா, இந்திய அணியை பைனலுக்கு கொண்டு சென்றார். பின் 2024ல் 'டி-20' உலக கோப்பை, 2025ல் சாம்பியன்ஸ் டிராபி வென்று தந்தார். தவிர உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரு முறை அணியை பைனலுக்கு கொண்டு சென்றார். தற்போது சர்வதேச 'டி-20' (2024), டெஸ்டில் (2025) இருந்து விடைபெற்ற நிலையில் ஒருநாள் அரங்கில் தொடர உள்ளார்.
'பயோ-டேட்டா'
பெயர்: ரோகித் சர்மா
பிறந்த நாள்: 30-04-1987
பிறந்த இடம்: நாக்பூர், மஹாராஷ்டிரா
டெஸ்ட் அறிமுகம் : 2013, நவ. 6-8, எதிர்: வெ.இ., இடம்: கோல்கட்டா
கேப்டனாக
டெஸ்ட் அரங்கில் 24 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா, 12 வெற்றி, 3 'டிரா', 9 தோல்வியை பெற்றுத் தந்தார். கடந்த 2021ல் ஐ.சி.சி., சார்பில் சிறந்த டெஸ்ட் அணிக்கு தேர்வானார். இவரது தலைமையிலான இந்திய அணி 2023ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரை சென்றது. 67 டெஸ்டில் 12 சதம், 18 அரைசதம் உட்பட 4,301 ரன் எடுத்துள்ளார்.
சாதனை துளிகள்
டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா நிகழ்த்திய சில சாதனைகள்.
* அறிமுக டெஸ்டில் சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் இந்தியாவின் லால் அமர்நாத், குண்டப்பா விஸ்வநாத், கங்குலி, சேவக், ரெய்னா, ஆஸ்திரேலியாவின் கிரேக் சாப்பல், மார்க் வாக் உள்ளிட்டோருடன் இணைந்தார் ரோகித்.
* ஒரு டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்சிலும் சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சுனில் கவாஸ்கர், விஜய் ஹசாரே, டிராவிட், ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர், பாண்டிங், ஸ்டீவ் வாக், வெஸ்ட் இண்டீசின் லாரா உள்ளிட்டோருடன் இணைந்தார்.
* அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் 9வது இடத்தை (தலா 88 சிக்சர்) வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாராவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
* ஏழாவது விக்கெட்டுக்கு அதிக ரன் (280 ரன், எதிர்: வெஸ்ட் இண்டீஸ், 2013, கோல்கட்டா) சேர்த்த இந்திய ஜோடி வரிசையில் ரோகித்-அஷ்வின் ஜோடி முதலிடம். சர்வதேச அளவில் 4வது இடம்.
மூன்றாண்டு தாமதம்
கடந்த 2010ல் நாக்பூரில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்தியாவின் ரோகித் அறிமுகமாக இருந்தார். ஆனால் காயத்தால் இப்போட்டியில் இருந்து விலகினார். மூன்று ஆண்டுகளுக்கு பின் (2013), கோல்கட்டா டெஸ்டில் அறிமுகமானார் ரோகித்.

மேலும்
-
பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை முறியடித்தது இந்திய ராணுவம்; லாகூரில் வான் பாதுகாப்பு கவச வாகனம் அழிப்பு!
-
அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் அறிவுரை
-
ஆபரேஷன் சிந்தூர் பெயரை சொந்தமாக்க 'போட்டா போட்டி'!
-
பாக்., தாக்கினால் பதிலடி நிச்சயம்: ஜெய்சங்கர் உறுதி
-
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
-
பாக்., ராணுவ தலைமையிடங்களில் பதுங்கிய பயங்கரவாதிகள் மசூத் அசார், ஹபீஸ், சலாவுதீன்