ஆபரேஷன் சிந்தூர் பெயரை சொந்தமாக்க 'போட்டா போட்டி'!

புதுடில்லி: 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயருக்கு வர்த்தக முத்திரை பதிவு (டிரேட் மார்க்) கோரி, சில நிறுவனங்கள் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மே 7ம் தேதி நள்ளிரவு இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் அந்நாடு ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட நடவடிக்கை மூலம் இந்தியா தாக்கியது.
இதனால் உலகம் முழுவதும் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயர் பிரபலம் அடைந்துள்ளது. இதை வர்த்தக ரீதியாக பயன்படுத்திக் கொள்ள தனியார் நிறுவனங்களும், தனி நபர்களும் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட 4 பேர் 'ஆபரேஷன் சிந்தூர்' பெயருக்கு வர்த்தக முத்திரை பதிவு (டிரேட் மார்க்) கோரி, விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளனர்.
ரிலையன்ஸ் தவிர மற்ற மூவரும் தனி நபர்கள். சினிமா, தொலைக்காட்சி தொடர் அல்லது அது தொடர்பான வர்த்தக செயல்பாடுகளுக்காக இந்த பெயரை இவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், விண்ணப்பத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஆபரேஷன் சிந்தூர் மீது வர்த்தக முத்திரை பதிவை பெறும் நோக்கமில்லை என ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வர்த்தக முத்திரை பதிவை பெற, இளநிலை அதிகாரி ஒருவர், அனுமதி இல்லாமல் தவறுதலாக விண்ணப்பித்து விட்டார். அதனை ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனம் திரும்ப பெற்றுக் கொள்கிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நினைத்து ரிலையன்ஸ் குழுமம் பெருமை கொள்கிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது, பயங்கரவாதத்திற்கு எதிரான நமது ஆயுதப்படைகளின் போராட்டத்தில் சாதனையாக அமைந்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், அரசுக்கும், ஆயதப்படைகளுக்கும் ரிலையன்ஸ் முழு ஆதரவு அளிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
வர்த்தக முத்திரை என்ன?
வர்த்தக முத்திரை என்பது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பு அல்லது சேவையை வேறுபடுத்திக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல், சின்னம் ஆகும். இது நிறுவனத்திற்கு தனியுரிமையை வழங்குகிறது.
விண்ணப்பித்து விட்டால் மட்டும் வர்த்தக முத்திரை கிடைத்துவிடாது. அதற்கான பதிவாளர் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உரிய முடிவு எடுப்பார்.
ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அதையும் பரிசீலனை செய்வார் என்கின்றனர் நிபுணர்கள்.
பெயர் பின்னணி...!
'ஆபரேஷன் சிந்துார்' என்ற பெயரை ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா சூட்டியது. அதில், ஆங்கிலத்தில் இடம் பெற்ற O என்ற எழுத்துக்கு பதிலாக, ஒரு கிண்ணத்தில் குங்குமம் வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு பின், குங்குமம் கொட்டிக் கிடக்கிறது. இது, 25 பெண்களின் வாழ்க்கைத் துணையை பறித்த பாக்., பயங்கரவாதிகளின் இரக்கமற்ற தன்மையைக் குறிக்கிறது. இது தான் ஆபரேஷன் சிந்தூர் பெயருக்கு மவுசு கூடியதற்கு காரணமாக அமைந்துள்ளது.




மேலும்
-
பாகிஸ்தான் 5 துண்டுகளாக சிதறும்: ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் கணிப்பு
-
கஜகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்
-
கரையான் அரித்த ரூ.1 லட்சம்: ஏழை பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ்
-
இந்தியா தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் தான்: வெளியுறவு செயலர் உறுதி
-
“ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கை எதிரொலி: படும் பாதாளத்தில் பாகிஸ்தான் பங்குச்சந்தை!
-
ராணுவ வீரர்களால் பெருமை: ராஜ்நாத் சிங்