அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் அறிவுரை

1

புதுடில்லி: '' நாடு முக்கியமான காலகட்டத்தில் பயணித்து வருவதால், அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன், விழிப்புடன் இருக்க வேண்டும்'', என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கேபினட் செயலர், பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகள், பாதுகாப்பு, உள்துறை, வெளியுறவுத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு, மின்சாரம், சுகாதாரம் மற்றும் தொலைதொடர்புத்துறை செயலாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், தற்போதுள்ள சூழ்நிலையில் அமைச்சகங்களின் செயல்பாடுகள் மற்றும் தயார் நிலை குறித்து பிரதமர் ஆய்வு செய்தார்.


சிவில் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்துதல், தவறான மற்றும் போலி செய்திகளை பரவுவதை தடுப்பதற்கான முயற்சி செய்வது குறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.


இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர், அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். செயலாளர்கள் அந்தந்த அமைச்சகங்களின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்ய வேண்டும். அத்தியாவசிய அமைப்புகளின் முழுமையான செயல்பாட்டை உறுதி செய்ய, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.


நாடு முக்கியமான காலகட்டத்தில் பயணித்து வருவதால், தொடர்ந்து விழிப்புடன் இருப்பதுடன் தெளிவான தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட வேண்டும். தேச பாதுகாப்பு, மற்றும் குடிமக்கள் பாதுகாப்புக்கு அரசின் உறுதிப்பாட்டை இந்த கூட்டத்தில் பிரதமர் உறுதிப்படுத்தினார்.


இந்த கூட்டத்தில் பங்கேற்ற செயலாளர்கள், தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கவேண்டிய திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். மோதல் காலத்தில் தாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், அனைத்து வகையான சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மாநில அரசுகள் மற்றும் களத்தில் உள்ள அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும்படி செயலர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Advertisement