பிரேவிஸ் அபாரம்; சென்னை அணி திரில் வெற்றி

3

கோல்கட்டா: பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியில், டிவால்ட் பிரேவிஸ் அசத்தல் அரைசதம் கைகொடுக்க, 2 விக்கெட் வித்தியாசத்தில், சென்னை அணி திரில் வெற்றி பெற்றது.


பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 57-வது லீக் ஆட்டத்தில் சென்னை - கோல்கட்டா அணிகள் மோதின. கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கோல்கட்டா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.


அதன்படி, களமிறங்கிய கோல்கட்டா அணிக்கு குர்பாஸ் (11) ஏமாற்றம் அளித்தார். அதன்பிறகு, ஜோடி சேர்ந்த நரேன், ரஹானே இணை சிறப்பாக ஆடியது. போட்டியின் 8வது ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்த நூர் அகமது, நரேன்(26), ரகுவன்ஷி (1) ஆகியோரை அவுட்டாக்கி அசத்தினார்.


அதன்பிறகு, சிறப்பாக ஆடி வந்த ரஹானே, 48 ரன்கள் எடுத்திருந்த போது, ஜடேஜா பந்தில் அவுட்டானார். இதையடுத்து, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஸல் (38), ரிங்கு சிங் (9) ஆகியோர் நூர் அகமது பந்தில் அவுட்டாகினர். மணிஸ் பாண்டே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கோல்கட்டா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. நூர் அகமது 4 விக்கெட்டுக்களும், கம்போஜ், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.


180 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய சென்னை அணியில் ஒரு முனையில் உர்வில் பட்டேல் அதிரடியாக ஆடி பவுண்டரிகள், சிக்சர்கள் என விளாசி கொண்டிருக்க, மறு முனையில் ஆயுஷ் மித்ரே, கான்வே ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினர்.



அதிரடி காட்டிய உர்வில் பட்டேல் 31 ரன்களிலும், அஷ்வின் 8 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 19 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். அதிரடியாக ஆடிய பிரெவிஸ் 52 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து தோனியும், சிவம் துபேயும் ரன் குவித்த நிலையில் 45 ரன்களில் சிவம் துபே அவுட்டாகி வெளியேறினார்.


ஆட்டத்தின் கடைசி ஓவரில் தோனி ஒரு சிக்சர் அடித்தார். பின்னர் காம்போஜ் அடித்த ஒரு பவுண்டரி மூலம் சென்னை அணி 19.4 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கோல்கட்டா அணி சார்பில் ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement