தோனி சிக்சர்... சென்னை சூப்பர்: கோல்கட்டா அணி ஏமாற்றம்

2

கோல்கட்டா: தனது ராசியான ஈடன் கார்டன் மைதானத்தில் தோனி சிக்சர் விளாச, சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோல்கட்டா அணி 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்தது.

கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா, சென்னை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் ரகானே, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
ரசல் விளாசல்: கோல்கட்டா அணிக்கு குர்பாஸ் (11) ஏமாற்றினார். கேப்டன் ரகானே (48), சுனில் நரைன் (26) ஓரளவு கைகொடுத்தனர். ஜடேஜா வீசிய 15வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ரசல் (38), நுார் அகமது பந்தில் அவுட்டானார். பதிரானா பந்தை சிக்சருக்கு அனுப்பிய மணிஷ் பாண்டே, நுார் அகமது பந்தில் ஒரு பவுண்டரி விரட்டினார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன் எடுத்தது. மணிஷ் (36), ராமன்தீப் சிங் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.


உர்வில் ஆறுதல்: சென்னை அணிக்கு ஆயுஷ் மாத்ரே (0), கான்வே (0) ஏமாற்றினர். மொயீன் அலி வீசிய 2வது ஓவரில், 2 சிக்சர், ஒரு பவுண்டரி விரட்டிய உர்வில் படேல் (31 ரன், 4 சிக்சர், ஒரு பவுண்டரி), ஹர்ஷித் ராணாவிடம் சரணடைந்தார். அஷ்வின் (8), ரவிந்திர ஜடேஜா (19) நிலைக்கவில்லை. சென்னை அணி 60 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறியது.

பிரவிஸ் அபாரம்: பின் இணைந்த பிரவிஸ், ஷிவம் துபே ஜோடி அணியை மீட்டது. வைபவ் அரோரா வீசிய 11வது ஓவரில் 3 சிக்சர், 3 பவுண்டரி அடித்த பிரவிஸ், 22 பந்தில் அரைசதம் எட்டினார். ஆறாவது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்த போது வருண் பந்தில் பிரவிஸ் (52) ஆட்டமிழந்தார். ஹர்ஷித் பந்தை சிக்சருக்கு அனுப்பிய துபே, ரசல் பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். வைபவ் அரோரா வீசிய 19வது ஓவரில் துபே (45), நுார் அகமது (2) அவுட்டாகினர்.

தோனி 'சிக்சர்': கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. ரசல் பந்துவீசினார். 43 வயதான தோனி, முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். நான்காவது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அன்ஷுல் கம்போஜ் வெற்றியை உறுதி செய்தார்.

சென்னை அணி 19.4 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 183 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தோனி (17), கம்போஜ் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

தனது கடைசி 2 போட்டியில் வென்றால் கூட 15 புள்ளி தான் பெறும் என்பதால் கோல்கட்டாவின் 'பிளே-ஆப்' வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது.



தோனி '200'
நரைன், ரகுவன்ஷியை அவுட்டாக்க உதவிய சென்னை அணி கேப்டன் தோனி, பிரிமியர் லீக் அரங்கில் 200 விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட முதல் விக்கெட் கீப்பரானார். இதுவரை 276 போட்டியில், 153 'கேட்ச்', 47 'ஸ்டம்பிங்' உட்பட 200 விக்கெட் விழ காரணமாக இருந்துள்ளார். அடுத்த இரு இடங்களில் தினேஷ் கார்த்திக் (174 விக்.,), விரிதிமன் சகா (111) உள்ளனர்.

ஜடேஜா '141'
ரகானேவை அவுட்டாக்கிய ரவிந்திர ஜடேஜா, பிரிமியர் லீக் அரங்கில் அதிக விக்கெட் சாய்த்த சென்னை பவுலர்கள் பட்டியலில் டுவைன் பிராவோவை (140 விக்கெட், 116 போட்டி) முந்தி முதலிடம் பிடித்தார். ஜடேஜா, 184 போட்டியில், 141 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

ரகானே '5000'
பிரிமியர் லீக் அரங்கில் 5000 ரன் எடுத்த வீரர்கள் வரிசையில் இணைந்தார் ரகானே. இதுவரை 197 போட்டியில், 5017 ரன் (2 சதம், 33 அரைசதம்) குவித்துள்ளார். இம்மைல்கல்லை எட்டிய 9வது வீரரானார்.

ராணுவ வீரர்களுக்கு பாராட்டு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதனை பாராட்டும் விதமாக, போட்டிக்கு முன் மைதானத்தின் 'மெகா' ஸ்கிரீனில், 'இந்திய ராணுவத்தை நினைத்து பெருமை கொள்கிறோம்' என்று காண்பிக்கப்பட்டது. அப்போது கோல்கட்டா, சென்னை அணி வீரர்கள் அணிவகுத்து நிற்க, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

Advertisement