கருக்குப்பேட்டை கிராமத்தில் மனை பட்டா வழங்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திம்மையன்பேட்டை ஊராட்சியில், கருக்குப்பேட்டை கிராமம் உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கிராம நத்தம் புறம்போக்கு நிலத்தில், 25 ஆண்டுகளுக்கு மேலாக குடிசை போட்டு வசித்து வருகின்றனர்.
இவர்கள் பட்டா கேட்டு பல முறை விண்ணப்பித்தும் வருவாய் துறையினர் பட்டா வழங்கவில்லை.
இதனால் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டும் ஆணை பெற முடியவில்லை. காஞ்சிபுரம் கலெக்டரிடம் பல முறை மனு அளித்தும் வருவாய் துறையினர் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என, கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, கருக்குப்பேட்டை கிராமத்தில், குடிசை வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, வாலாஜாபாத் வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பட்டா கேட்டு வரும் மனுக்கள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். எந்த புல எண் என ஆய்வு செய்து விட்டு, பட்டா வழங்க கூடிய ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலமாக இருந்தால், பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.