கருட வாகனத்தில் கிருஷ்ணர் வீதியுலா

திருத்தணி:திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், கடந்த மாதம், 24ம் தேதி, கொடியேற்றத்துடன் தீமிதி விழா துவங்கியது.

தினமும், மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. மேலும், மதியம் மகாபாரத சொற்பொழிவும், இரவு மகாபாரத நாடகமும் நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று, கிருஷணர் துாது மற்றும் கருடாழ்வார் காட்சி பவனியையொட்டி, காலை 8:00 மணிக்கு டிராக்டரில் கருட வாகனத்தில் உற்சவர் கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, திருத்தணி நகரம் முழுதும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஊர்வலத்தின் போது, பெண்கள் உற்சவர் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். நாளை உற்சவர் திரவுபதியம்மன் புஷ்ப பல்லாக்கில் எழுந்தருளி திருத்தணியில் வீதியுலா வருவார்.

நாளைமறுதினம், காலை 6:00 மணிக்கு கர்ணம் மோட்சம் மற்றும் காலை 9:00 மணிக்கு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெறும். மாலை, 6:00 மணிக்கு தீமிதி விழாவும், இரவு உற்சவர் அம்மன் வீதியுலாவுடன் நடப்பாண்டிற்கான விழா நிறைவடைகிறது.

Advertisement