ரோட்டோர கடைகளில் விதிமீறல் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

உடுமலை; ரோட்டோரங்களில் செயல்படும் தற்காலிக கடைகளில், குழந்தை தொழிலாளர்கள் பணியில், ஈடுபடுத்தப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள, தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய ரோடுகளில், கோடை காலத்தில், பல்வேறு தற்காலிக கடைகள் அமைக்கப்படுகின்றன.

குறிப்பாக, கோடை காலத்தில், பல வகையான பழச்சாறுகள் விற்பனை செய்ய, 50க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். பிற பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் நிலையாக ஓரிடத்தில், அமைப்பதில்லை.

இந்நிலையில், இந்த கடைகளில், பிற மாநிலத்தைச்சேர்ந்த குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனு: உடுமலை சுற்றுப்பகுதியில், மரத்தடிகளில், தற்காலிகமாக தள்ளுவண்டிகளை வைத்து பழச்சாறு விற்பனை செய்கின்றனர்.

இதில், நகரம் தவிர்த்து கிராமப்புற ரோடுகளில், செயல்படும் பழச்சாறு விற்பனை கடைகளில், 18 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். பிற மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால், அவர்களிடம் எந்த விபரமும் சேகரிக்க முடிவதில்லை.

இது குறித்து நேரடியாக ஆய்வு செய்து, குழந்தை தொழிலாளர்களை மீட்க வேண்டும். கோடை கால சீசனில், ரோட்டோர கடைகளில் நிலவும் விதிமீறல்கள் குறித்தும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் வாயிலாகவும் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement