சாமல்பள்ளத்தை தொடர்ந்து மேலுமலை பாலம் திறப்பு 4 பால பணிகள் முடிவது எப்போது?

சூளகிரி,:சூளகிரி அருகே சாமல்பள்ளம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தை தொடர்ந்து, மேலுமலை மேம்பாலமும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையில், ஓசூர் சிப்காட் ஜங்ஷன், கோபசந்திரம், சுண்டகிரி, சாமல்பள்ளம், மேலுமலை, கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை என மொத்தம், 6 இடங்களில் கடந்த, 2023 ம் ஆண்டு அக்டோபர் மாதம் மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கின. இதில் கடந்தாண்டு இறுதியில் சாமல்பள்ளம் மேம்பாலம் வாகன பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. தொடர்ந்து, மேலுமலை மேம்பாலம் கடந்த வாரம் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் வரும் வாகனங்கள் செல்லும் வகையில் ஒருபுறம் மட்டும் திறக்கப்பட்டது. மற்றொரு புறம் பணிகள் நடந்து வந்தன. அப்பணிகளும் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் முதல், இருபுறமும் வாகனங்கள் செல்ல மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள சிப்காட் ஜங்ஷன், போலுப்பள்ளி ஆகிய இரு இடங்களில், 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன. அதேபோல், சுண்டகிரி, கோபசந்திரம் பகுதியிலும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், கோபசந்திரம் மேம்பால பணிகள் மிகவும் மெதுவாக நத்தை வேகத்தில் நடக்கிறது. பாலம் வேலை நடக்கும் நான்கு இடங்களிலும் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்வதால், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பால பணிகளை விரைவுப்படுத்தி இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement