சிட்டி  கிரைம் செய்திகள்

தள்ளுவண்டி வியாபாரி மீது தாக்குதல்



சித்தாபுதுார், அம்பிகா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜா, 38; தள்ளுவண்டியில் நிலக்கடலை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வியாபாரத்தை முடித்துக்கொண்டு வி.கே.கே., மேனன் ரோட்டில் சென்றபோது, இரு வாலிபர்கள் மது போதையில் கடலை கேட்டனர். கடலை தீர்ந்து விட்டதாக தெரிவித்ததால், ஆத்திரமடைந்த இருவரும், ராஜாவை சரமாரியாக தாக்கி விட்டு தப்பினர். காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து, பொள்ளாச்சியை சேர்ந்த ராஜா, 25 மற்றும் போத்தனுார் கணேசபுரத்தை சேர்ந்த பவின், 22 ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

காப்பர் ஒயர் திருட்டு



இருகூர் பகுதியில் எல் அண்டு டி சாலையில், புதிதாக மருத்துவமனை கட்டப்படுகிறது. இங்கு கலியபெருமாள், 57 என்பவர் இன்ஜினியராக பணியாற்றுகிறார். புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் கட்டுமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் அதிகாலை இரண்டு பேர் கட்டடத்துக்குள் புகுந்து, அங்கிருந்த, 10 கிலோ காப்பர் ஒயர்களை திருடியுள்ளனர். அதை பார்த்த காவலாளிகள், இருவரையும் பிடித்து, கலியபெருமாளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்து, இருவரையும் சிங்காநல்லுார் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ராஜா, 36, கோவை அம்மன்குளத்தை சேர்ந்த தங்ககுமார், 46 என்பது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

ம து பாட்டில்கள் பறிமுதல்



சாயிபாபா காலனி பகுதியில் உள்ள 'டாஸ்மாக்' கடையில், 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது. மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கண்காணித்தனர். காலை, 9:00 மணிக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. கடையில் இருந்த, 139 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.3,860ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக, மது விற்பனையில் ஈடுபட்ட, புதுக்கோட்டையை சேர்ந்த லட்சுமணன், 23, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement