ரவுண்டானா பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை ஏற்படுத்த கோரிக்கை

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ரவுண்டானா சாலையின் ஒரு புறத்தில், காஞ்சிபுரம் செல்வதற்கான பேருந்து நிறுத்தமும், மற்றொரு புறச்சாலை ஓரத்தில் செங்கல்பட்டு செல்வதற்கான பேருந்து நிறுத்தமும் உள்ளன.

இவற்றில், காஞ்சிபுரம் செல்வதற்கான நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும், செங்கல்பட்டு செல்வதற்கான ரவுண்டானா பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி ஏற்படுத்தப்படவில்லை.

இதனால், வாலாஜாபாதில் இருந்து, செங்கல்பட்டு செல்வோர் மற்றும் திருமுக்கூடல், உள்ளாவூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பயணியர், காற்று, மழை மற்றும் வெயில் நேரங்களில் அவதிப்படுகின்றனர்.

எனவே, செங்கல்பட்டு செல்வதற்கான பேருந்து நிறுத்த சாலை ஓரத்தில் பயணியர் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மானாம்பதி



புக்கத்துறை -- மானாம்பதி நெடுஞ்சாலையில் சாலவாக்கம் கூட்டு சாலை உள்ளது. இந்த கூட்டு சாலைக்கு, கிளக்காடி, கருணாகரச்சேரி, சாலவாக்கம், எஸ்.மாம்பாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர், தினமும் வந்து செல்கின்றனர்.

இங்கு, சென்னை, செங்கல்பட்டு, உத்திரமேரூர், வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நின்று செல்கின்றன.

சாலவாக்கம் கூட்டுசாலையில், பல ஆண்டுகளாக பயணியர் நிழற்குடை இல்லாத நிலை தொடர்ந்து வருகிறது.

எனவே, சாலவாக்கம் கூட்டு சாலையில் பயணியர் நிழற்குடை அமைக்க, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement